செய்திகள்
கொரோனா பணி நன்கொடைக்கான காசோலையை புதுமண தம்பதிகள் வழங்கிய காட்சி.

ரூ.37 லட்சம் நன்கொடை வழங்கிய புதுமண தம்பதி

Published On 2021-06-16 08:05 GMT   |   Update On 2021-06-16 08:05 GMT
கொரோனா கொடுமையால் தவிக்கும்பலருக்கும் மருத்துவ மனைக்கும் நிதி வழங்கிய மணமக்கள் குடும்பத்தினரை பலரும் பாராட்டினர்.
திருப்பூர்:

கொரோனா தடுப்பு ஊரடங்கால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வலர்கள் உணவு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூரை சேர்ந்த புதுமண தம்பதியினர்  திருமணம் நடந்த கையோடு கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளனர்.

திருப்பூரை சேர்ந்த அருள்செல்வம் என்பவரின் மகன் அருள் பிரனேஷ். இவருக்கும் திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் கவுரிசங்கர் என்பவரின் மகள் அனு என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, காங்கயம்-வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையாக திருமணம் நடந்தது,

திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு ரூ.5 லட்சம், பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு ரூ.11 லட்சம், புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டமைக்கப்படும் முதியோர் இல்லத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கினர்.

மேலும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனை சிகிச்சை மையத்தில்  ஐ.சி.யு., யூனிட் அமைக்க ரூ.7.66 லட்சம், மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் 8 குடும்ப ங்களுக்கு ரூ.7லட்சம் என மொத்தம் ரூ.37.66 லட்சத்தை வழங்கினர்.

திருமணத்தை எளிமையாக நடத்தியதால் மீதமான பணத்தை கொரோனா பணிகளுக்கு அளித்ததாக அருள்செல்வம் தெரிவித்தார்.கொரோனா கொடுமையால் தவிக்கும் பலருக்கும் மருத்துவமனைக்கும் நிதி வழங்கிய மணமக்கள் குடும்பத்தினரை பலரும் பாராட்டினர். கொரோனா பணி நன்கொடைக்கான காசோலையை புதுமண தம்பதிகள் வழங்கிய காட்சி.
Tags:    

Similar News