செய்திகள்
மெட்ரோ ரெயில்

2வது கட்ட திட்டம்- மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணி ஒரு சில வாரத்தில் தொடக்கம்

Published On 2021-06-16 07:45 GMT   |   Update On 2021-06-16 07:45 GMT
கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக 2-வது திட்டப் பணிகள் தொடங்குவதில் தாமதம் எற்பட்டது. வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
சென்னை:

மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்டம் 118.9 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

மாதவரம்-சிறுசேரி சிப்காட் 45.81 கி.மீ. தூரம் கொண்ட 3-வது வழித்தடமாகும். இதில் 19 கி.மீ.தூரம் உயர்மட்ட பாதையும் 26.72 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது.

4-வது வழித்தடம் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையே 26.1 கி.மீ. தூரத்திற்கும், 5-வது வழித்தடம் மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 47 கி.மீ. தூரத்திற்கும் அமைகிறது.

கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக 2-வது திட்டப் பணிகள் தொடங்குவதில் தாமதம் எற்பட்டது. வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

தற்போது பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

மாதவரம் மெட்ரோ ரெயில் பணி இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாதவரம்-தரமணி இடையே 2 கட்டமாக மெட்ரோ ரெயில் பணி தொடங்க உள்ளது.

மாதவரம்-கெல்லீஸ், கெல்லீஸ்-தரமணி இடையே சுரங்கப்பாதை அமைக்கப்படும் பணி தொடங்கப்படுகிறது.

இதற்கான டெண்டர் 2 பெரிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

இந்த திட்டத்தில் மாதவரம் மெட்ரோ ரெயில் நிலையம் முக்கியமான பகுதியாகும். அதனால் மாதவரத்தில் இருந்து இந்த பணி தொடங்குகிறது. மேலும் மிகப்பெரிய மெட்ரோ ரெயில் பணிமனையும் இந்த திட்டத்தில் மாதவரத்தில் அமைகிறது.

இது மிகப்பெரிய மெட்ரோ ரெயில் முனையமாக அமைகிறது. ஒப்பந்ததாரர்களிடம் இந்த பணியை மாதவரத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். பல்வேறு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு ‘செட்டிங்’ செய்யப்படுகிறது.

அதன் பின்னர் சுரங்கங்கள் தோண்டும் பணி தொடங்கப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் பொது போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே வட சென்னையில் சுரங்கப்பாதை அமைத்த அனுபவம் உள்ளது. அதனால் அப்போது ஏற்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. அது போல தற்போது ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.



Tags:    

Similar News