செய்திகள்
யூ டியூப் கேம் மதன்

நித்யானந்தாவே வெளியில் இருக்கும்போது என்னை கைது செய்து விடுவார்களா?- யூ டியூப் மதன்

Update: 2021-06-16 07:33 GMT
சேலத்தை சேர்ந்த மதன், தலைமறைவாக உள்ளார். அவரை தேடிக் கண்டுபிடிக்க சேலம் விரைந்த போலீசார், தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சென்னை:

‘யூ டியூப்’பில் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பலர் யூடியூப் சேனல்களை தொடங்கி உள்ளனர்.

பொதுமக்களுக்கு பலன் அளிக்கும் வகையிலான தகவல்களும் அதில் இடம்பெற்று வருகிறது. தங்களுக்கு பிடித்தமான சமையல், பொழுதுபோக்கு வி‌ஷயங்களை சிறுவர்-சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே யூ டியூப்பில் வெளியிட்டு வருகிறார்கள்.

அதேநேரத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுவர்களை சீரழிக்கும் வகையிலான யூ டியூப் சேனல்களும் அதிகரித்து உள்ளன.

அந்த வகையில் யூ டியூப் சேனலை நடத்தி வரும் மதன் என்பவர் தனது யூ டியூப் சேனல்களில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரத்தில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் இளம்பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளை மதன் பேசுவதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் உ ள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலத்தை சேர்ந்த மதன், தலைமறைவாக உள்ளார். அவரை தேடிக் கண்டுபிடிக்க சேலம் விரைந்த போலீசார், தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னைலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் மதன் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

அதே நேரத்தில் மதன் தலைமறைவாக இருந்து கொண்டு தனது ரசிகைகளுடன் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மதன் பெண்களுடன் ஆபாசமாக பேசிய ஆடியோக்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போதைய ஆடியோவில் மதன் பேசும் பேச்சுக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

பெண் ரசிகைகளுடன் அவர் பேசும் பேச்சுக்கள் போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது.

மதன்- பெண் ரசிகை இடையே நடந்த உரையாடல் விவரம் வருமாறு:-

ரசிகை: உங்கள் போட்டோவை எல்லாம் வெளியிட்டுள்ளார்களே?

மதன்: இன்று எனது போட்டோவை வெளியிட்டு ‘யூ டியூப்’ தொடர்பான செய்திகளை கூறிவருகிறார்கள். அதில் எனது அண்ணன் புகைப்படமும் உள்ளது. நான் புகைப்படம் எடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்தபோது நான் எடுத்த புகைப்படத்தை ஒரு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள்.

இது போன்ற வி‌ஷயங்களை ஜாலியாக, குஜாலாக எடுத்து கொள்ள வேண்டியது தான்.

ரசிகை: நீங்கள் ஜெயிலுக்கு சென்று விடுவீர்களா? உங்கள் சேனலை முடக்கி விடுவார்களா?

மதன்: அதற்கு வாய்ப்பே இல்லை. நம்பர் 1 லாயர்களை வைத்துள்ளேன். டெல்லியிலும் வக்கீல்கள் உள்ளனர். லட்சக்கணக்கில் இதற்காக செலவு செய்துள்ளேன். ஜெயிலுக்கு செல்ல வாய்ப்பு இல்லை. ஒருவேளை அப்படி நடந்தால் வெளியில் வந்து மீண்டும் ‘யூ டியூப்’ சேனலை தொடங்குவேன். அதற்கு மதன் ‘யூ டியூப் சேனல் என்றே பெயர் வைப்பேன்.

அப்போது இவர்களை கிழிகிழி என கிழித்து தற்போது இருப்பதை விட வேகமாக செயல்படுவேன்.

ரசிகை: இதற்கெல்லாம் கைது செய்வார்களா?

மதன்: அதானே... நம் தலைவர் நித்யானந்தாவே வெளியில் இருக்கும்போது என்னை கைது செய்து விடுவார்களா என்ன? இதற்கெல்லாம் பயந்து நான் முடங்கமாட்டேன்.

மதன்: நான் ஜாதி, மதம் எதுவும் பார்ப்பதில்லை. சாமி கும்பிடுவதும் இல்லை. எல்லோரும் எனக்கு பொதுவானவர்களே.

இவ்வாறு மதனும், பெண் ரசிகையும் பேசும் ஆடியோ நீண்டு கொண்டே செல்கிறது.

ரசிகையுடன் மதன் நள்ளிரவில் போனில் பேசியுள்ளார். மணி 12.30 ஆகுது. தூங்க செல்லுங்கள் என்று கூறும் மதன் முடிவில் ஐ லவ் யூ என்றும் கூறுகிறார். மதன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த ஆடியோ உரையாடல்களை வைத்து மதன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஆய்வகங்கள் உள்ளன. அதனை வைத்து மதனை எப்படியும் கண்டுபிடித்துவிடுவோம் என்று தெரிவித்தனர்.

போலீசார் மதனை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் போலீசுக்கு சவால் விடும் வகையில் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Tags:    

Similar News