செய்திகள்
மாம்பழம்.

ஊரடங்கால் மாம்பழங்கள் விற்பனை மந்தம்

Published On 2021-06-16 07:12 GMT   |   Update On 2021-06-16 07:12 GMT
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் வெளிநாட்டுக்கு பழங்கள் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் பகுதியில் அதிக அளவில் மா சாகுபடி நடைபெறுகிறது. இதில் பல விவசாயிகள் குத்தகை அடிப்படையில் ஆண்டுதோறும் பல லட்சம் செலுத்தி மாமரங்களைப் பராமரித்து அதில் கிடைக்கும் பழங்கள் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்தநிலையில் நடப்பு ஆண்டில் பருவம் தவறி பெய்த மழையால் மாமரங்களில் மகசூல் குறைந்துள்ளது. 

மேலும் தளர்வுகளற்ற ஊரடங்கின் போது பெருமளவு பழங்கள் பழுத்து வீணாகின. நீலா, நடுச்சாளை, கிளிமூக்கு உள்ளிட்ட ஒரு சில ரகங்கள் ஆண்டுக்கு 2 முறை காய்க்கும். ஒருசில ரகங்கள் மே, ஜூன் மாதங்களில் காய்க்காவிட்டால் அடுத்த 6 மாதங்களுக்கு பிறகு காய்க்கும். அப்போது நல்ல விலை கிடைக்கும். ஆனால் தற்போது அனைத்து ரகங்களும் ஒரே நேரத்தில் காய்த்துவிட்டன.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் வெளிநாட்டுக்கு பழங்கள் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் அதிக அளவில் வராததால் மாம்பழங்கள் பெருமளவு வீணாகும் நிலை உள்ளது. தொடர் ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசியப்பயன்பாட்டுக்கு மட்டுமே செலவு செய்யும் சூழல் உள்ளது. இதனால் மாம்பழங்கள் நுகர்வு குறைந்து விற்பனையில் மந்த நிலை நீடிக்கிறது. 

குமரலிங்கம் பகுதியில் விளையும் மாம்பழங்களில் அல்போன்சா ரகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. செந்தூரா, கிளிமூக்கு, நீலம் போன்ற ரக மாம்பழங்கள் ஜூஸ் தயாரிப்புக்கு பயன்படுகிறது. இதுதவிர கத்தாமணி எனப்படும் ரக மாங்காய் ஊறுகாய் தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
Tags:    

Similar News