செய்திகள்
திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள கடை முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

டாஸ்மாக் கடைகளை திறக்க ஆயத்த பணிகள் தீவிரம்

Published On 2021-06-16 07:11 GMT   |   Update On 2021-06-16 07:11 GMT
திருப்பூர் மாவட்டத்தில் தினசரி ரூ.2கோடி முதல் ரூ.3கோடி வரை மதுவிற்பனையாகும். பண்டிகை காலங்களில் ரூ.10 கோடி வரை விற்பனையாகும்.
திருப்பூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை குறையாத திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக திருப்பூர் மாவட்ட மதுபிரியர்கள் அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுவாங்க படையெடுத்து செல்கின்றனர். தற்போது அதனை போலீசார் நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் 240 டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் உள்ளன. இக்கடைகளில் தடுப்பு கம்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. 

அதன்படி மதுக்கடைகள் முன் தடுப்பு கம்புகள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் சமூக இடைவெளி விட்டு நின்று மதுபிரியர்கள் வாங்கும் வகையில் 6 அடி இடைவெளியில் வட்டம் போடப்படுகிறது. கடைகளை திறக்க எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும் என்பதால் விற்பனையாளர்கள்  தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெளிமாவட்டங்களை சேர்ந்த மதுக்கடை ஊழியர்கள் நேற்று அவசரமாக அவர்கள் வேலை செய்யும் ஊர்களுக்கு  திரும்பினர். பகுதி வாரியாக போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று மதுக்கடைகளில் நேரில் சென்று தடுப்பு அமைப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்கின்றனர். 

திருப்பூர் மாவட்டத்தில் தினசரி ரூ.2கோடி முதல் ரூ.3கோடி வரை மதுவிற்பனையாகும். பண்டிகை காலங்களில் ரூ.10 கோடி வரை விற்பனையாகும். 
Tags:    

Similar News