செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனா தடுப்பு பணி- மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published On 2021-06-15 06:22 GMT   |   Update On 2021-06-15 09:13 GMT
மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமானதை அடுத்து கடந்த மாதம் 10-ந்தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அன்று முதல் பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் மற்றும் அத்தியாவசிய விற்பனை கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.

நோய் பரவல் மிகவும் அதிகரித்ததையடுத்து 24-ந்தேதி முதல் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முற்றிலும் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டது. ஒரு வாரத்திற்கு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பின்னர் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது.



7-ந்தேதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 14-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. 14-ந்தேதி மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள், வீட்டு உபயோக கடைகள், டீ கடைகள், சலூன்கள், அழகு நிலையங்கள் ஆகியவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போதைய ஊரடங்கு 21-ந்தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவல் தொடர்ந்து மிகவும் குறைந்து வருகிறது. 5 மாவட்டங்களில் 100-க்கும் குறைவாகவே நோய் தொற்று உள்ளது. 10 மாவட்டங்களில் 200-க்கும் குறைவாக தொற்று உள்ளது.

தினசரி பாதிப்பு 7 ஆயிரத்துக்கும் மேல் இருந்த சென்னையில் ஆயிரத்துக்கும் குறைவானவர்களே நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். நேற்று 828 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவை, ஈரோடு மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் நோய் பரவல் வேகமாக சரிந்து வருகிறது. எனவே அடுத்தக்கட்டமாக மேலும் பல தளர்வுகளை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள நிலைமைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் பல மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். சில கலெக்டர்கள் நேரில் பங்கேற்றார்கள். மற்ற கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து முதலில் ஆலோசனை நடத்தப்பட்டது.


அதன் பின்னர் கொரோனா பாதிப்பு, தற் போதைய நிலவரங்கள், ஊரடங்கு செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று வெகுவாக குறைந்துள்ளதால் மேலும் பல தளர்வுகளை அறிவிக்கலாமா? என்பது குறித்து கலெக்டர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

முழு ஊரடங்கு காரணமாக பொதுபோக்குவரத்து நீண்ட காலமாகவே நிறுத்தப்பட்டு இருக்கிறது. இது பொதுமக்களின் பயணத்துக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே பொது போக்குவரத்தை தொடங்கலாமா? என்பது பற்றி முக்கியமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு சாதகமான சூழ்நிலை அமைந்தால் அடுத்த வாரம் முதல் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிட வாய்ப்பு உள்ளது.

21-ந்தேதி வரை அமலில் உள்ள முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது ரத்தாகுமா? என்பதும் அப்போது தெரியவரும்.
Tags:    

Similar News