செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி செலுத்துவதற்காக மையங்களில் அதிகாலையிலேயே குவிந்த பொதுமக்கள்

Published On 2021-06-12 11:57 GMT   |   Update On 2021-06-12 11:57 GMT
கோவை மாவட்டத்திற்கு நேற்று கோவேக்சின் தடுப்பூசி 7,500-ம், கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வந்தன. இவை மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட்டது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வந்தது. பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் தற்போது கொரோனா தொற்று வேகமாக சரிந்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தடுப்பூசி செலுத்துவதற்காக நாள் கணக்காக காத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி சார்பில் 5 மண்டலங்களிலும் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுதவிர அரசு ஆஸ்பத்திரியிலும் தடுப்பூசி போடப்படுகிறது.

புறநகர் பகுதிகளில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், காரமடை, அன்னூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள்.

கோவை மாவட்டத்திற்கு நேற்று கோவேக்சின் தடுப்பூசி 7,500-ம், கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வந்தன. இவை மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட்டது. கோவை மாநகராட்சியில் நேற்று 5 மண்டலங்களிலும் 75 இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மக்களும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி சென்றனர்.

இதன் காரணமாக கோவேக்சின் தடுப்பூசி வந்த சில மணி நேரங்களிலேயே 6,840 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் தீர்ந்து விட்டது. இதனால் இன்று கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை கோவை மாநகராட்சியில் 76 மையங்களிலும், புறநகரில் 53 மையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது. இதில் 2-வது தவணை செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், தடுப்பூசி மையங்களில் அதிகாலை முதலோ மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் டோக்கன் பெற்று கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி செல்கிறார்கள்.

தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையை காரணம் காட்டி இன்று நாளை என அலைக் கழிப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

குனியமுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று 190 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி போடுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் அந்த மையத்திற்கு நேற்று வெறும் 17 பேர் மட்டுமே வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். வெகுநேரமாக பணியா ளர்கள் காத்திருந்தும் யாரும் வராததால் சுகாதார பணியாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Tags:    

Similar News