செய்திகள்
மீன் வலைகளை சரி செய்யும் மீனவர்கள்.

கன்னியாகுமரியில் கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகு மீனவர்கள்

Published On 2021-06-12 09:53 GMT   |   Update On 2021-06-12 09:53 GMT
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் விசைப்படகுகளை மீனவர்கள் கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி:

ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.

இந்த இனப்பெருக்க காலங்களில் விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி கப்பல்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை, திருவள்ளூர் வரை ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கியது. இதனால் கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மீன்பிடி தடை காலத்தில் உயர் ரக மீன்கள் கிடைக்காததால் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. வள்ளம் மற்றும் கட்டுமரங்களில் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் கரையோரமாக சென்று மீன்பிடித்து வந்ததால் சாளை, நெத்திலி போன்ற சாதாரண வகை மீன்கள் மட்டுமே கிடைத்து வந்தன.

இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் நாளை மறுநாள் 14-ந்தேதி முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் விசைப் படகுகளை மீனவர்கள் கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசைப்படகுகளில் உள்ள என்ஜின்களை பழுது பார்ப்பது, பெயிண்ட் அடிப்பது, மற்றும் வலைகளை சீரமைப்பது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கன்னியாகுமரி சின்ன முட்டம் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரெஜீஸ் என்பவரிடம் கேட்டபோது மீன்பிடி தடை காலம் வருகிற 14-ந்தேதி நிறைவடைகிறது என்றும் இதையொட்டி பழுதடைந்த படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்வதற்கான அரசின் அனுமதியைப் பெறுவதற்காக காத்திருக்கிறோம் என்று கூறினார்.

Tags:    

Similar News