செய்திகள்
கோப்புப்படம்

மாயமான மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்-நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு

Published On 2021-06-12 07:21 GMT   |   Update On 2021-06-12 07:21 GMT
புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு அனுமதி பெற மழை நீர் சேகரிப்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்தி அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்டது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் உட்பட பல்வேறு தேவைகளுக்கு நிலத்தடி நீரை பெற ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. 1,200 அடி வரை போர்வெல்கள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சியதால் பல்வேறு ஒன்றியங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

ஆண்டுதோறும் வறட்சியால் தென்னை மரங்கள் காய்வது, குடிநீர் தட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களிலும் இப்பிரச்சினை தொடர் கதையாக உள்ளது. 

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மழை நீர் சேகரிப்புக்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதன்படி அரசு கட்டிடங்கள், கோவில்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. 

புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு அனுமதி பெற மழை நீர் சேகரிப்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்தி  அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்டது.இவ்வாறு சிறப்பாக தொடங்கிய திட்டம் பின்னர் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது. அரசு அலுவலகங்களில் கூட மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் காணாமல் போய்விட்டன. பல இடங்களில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

உடுமலை பகுதியில் பரவலாக பெய்த கோடை மழையை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. இந்த சீசனில் கிடைக்கும் மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க முடியும்.கிணறு மற்றும் போர்வெல்களில் நீர் மட்டம் உயர்ந்து விவசாயமும் பாதுகாக்கப்படும். எனவே உள்ளாட்சி அமைப்பினர் உடனடியாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News