செய்திகள்
ராமதாஸ்

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளைத் திறப்பதா?- ராமதாஸ் கண்டனம்

Published On 2021-06-11 15:24 GMT   |   Update On 2021-06-11 15:24 GMT
தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரத்துக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு தளர்வுகளின் ஒருகட்டமாகத் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவல் குறையும் விகிதம் கடந்த 4 நாட்களாகப் படிப்படியாகச் சரிந்து வருகிறது. இத்தகைய சூழலில் மதுக்கடைகளைத் திறப்பது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும்.

அழகு நிலையங்கள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால், அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதைத் தமிழக அரசு உணர வேண்டும்.


ஒருபுறம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கிவிட்டு, மறுபுறம் அதைப் பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளைத் திறப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த திமுக இப்போது அதே தவறைச் செய்யலாமா? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே!



மதுக்கடைகள் திறக்கப்பட்டால் ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் மிகக்குறைந்த வருமானமும் பறிபோய்விடும். குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும்; வன்கொடுமை பெருகும். இவற்றைத் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்”  என்று பதிவிட்டுள்ளார். 
Tags:    

Similar News