செய்திகள்
மின்னல்

மழைக்காலங்களில் இடி-மின்னலின்போது டி.வி., மிக்சிகளை இயக்காதீர்கள்- மின்வாரிய அதிகாரி அறிவுரை

Published On 2021-06-11 04:14 GMT   |   Update On 2021-06-11 04:14 GMT
சுவர்களில் ஈரத்தினால் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் வீடுகளில் கிரில், ஜன்னல்களில் இரும்புக் கம்பிகளைக் கட்டி துணி உலர்த்த வேண்டாம்.
பார்வதிபுரம்:

நாகர்கோவில் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், இழுவை கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்வதையும், அதனை தொடுவதையும் தவிர்க்க வேண்டும். மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்துவிழும் மின்சார கம்பிகளின் அருகே செல்லக்கூடாது. அது குறித்து உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து அதனை சரிசெய்யும் வரை எவரும் மின்கம்பியை தொடாமல் ஒத்துழைக்க வேண்டும்.

இடி-மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசியை உபயோகிப்பதை தவிர்க்கவும்.

அனைத்து வீடுகளிலும் இ.எல்.சி.பி. பொருத்தி மின் கசிவால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்.

சுவர்களில் ஈரத்தினால் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் வீடுகளில் கிரில், ஜன்னல்களில் இரும்புக் கம்பிகளைக் கட்டி துணி உலர்த்த வேண்டாம். கேபிள் டி.வி. ஒயர்களை மின்கம்பங்களில் கட்டி எடுத்து செல்வதால் மழைக்காலங்களில் ஒயரில் பழுதான பாகங்கள் வழியாக மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே கேபிள் டி.வி. ஒயர்களை மின்கம்பங்களில் கட்டி எடுத்து செல்லக்கூடாது என கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. வீட்டின் மேற்கூரையில் தண்ணீர் தேங்குவதால் சுவர்களில் தண்ணீர் கசிந்து ஈரம் ஏற்பட்டால் அந்த சுவர்களில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஈரமான சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள சுவிட்ச் போர்டு, ஈரமான சுவர்களை தொடக்கூடாது. அத்துடன் மின்சாரத்தை துண்டித்து தண்ணீர் கசிவையும், மின்கசிவையும் சீர் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News