செய்திகள்
தமிழக சட்டசபை

தமிழகத்தில் மீண்டும் மேல்சபை... கவர்னர் உரையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Published On 2021-06-10 09:45 GMT   |   Update On 2021-06-10 09:45 GMT
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மீண்டும் தமிழ்நாட்டில் மேல்-சபை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதுபற்றிய அறிவிப்பும் கவர்னர் உரையில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கடந்த மே மாதம் 11-ந் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் சபாநாயகராக மு.அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டார்.

புதிதாக அமைந்துள்ள 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் வருகிற 21-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 10 மணிக்கு கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது.

கொரோனா காலம் என்பதால் இந்த கூட்டம் சென்னை ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவானர் அரங்கில் நடைபெறுகிறது.

சமூக இடைவெளியை கடைபிடித்து இந்த கூட்டம் நடக்கிறது. இதில் கொரோனா நடைமுறைகள் கடைபிடிக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து கவர்னர் உரைக்குப்பின் நடக்கும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, தி.மு.க. தலைமையிலான புதிய அரசின் முக்கிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு எடுத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை கவர்னர் உரையில் இடம்பெறும். அடுத்து செயல்படுத்தப்பட இருக்கும் திட்டங்கள் பற்றிய தகவல்களும் இதில் இடம் பெறும் என்று தெரிகிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மீண்டும் தமிழ்நாட்டில் மேல்-சபை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதுபற்றிய அறிவிப்பும் கவர்னர் உரையில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கவர்னர் உரையுடன் முதல் நாள் சட்டசபை கூட்டம் நிறைவுபெறும். இதையடுத்து நடைபெறும் கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சபையில் முன்மொழியப்படும். அதன் மீது விவாதம் நடைபெறும்.

இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுவார். அதன்பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

சில தினங்கள் இடைவெளிக்குப்பிறகு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். இதில் இந்த நிதி ஆண்டுக்கான முதல் பட்ஜெட் புதிய அரசால் தாக்கல் செய்யப்படும்.

மேலும், இந்த கூட்டத் தொடரில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தீர்மானம், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்கும் தீர்மானம், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரும் தீர்மானங்கள் ஆகியவை தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

மேல்சபை அமைக்கும் தீர்மானமும் இதில் நிறைவேற்றப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் பல முக்கிய தீர்மான ங்களும் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. தி.மு.க. அரசு பதவி ஏற்ற பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இன்னும் செய்ய வேண்டியவை குறித்து சட்டசபையில் விவாதங்கள் நடைபெறும். எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளான பா.ம.க., பா.ஜனதா கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பும்.

இதற்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளிடையே காரசார விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கவர்னர் உரையை தொடர்ந்து நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News