செய்திகள்
மழை நீரை வெளியே எடுத்து ஊற்றுவதை காணலாம்

துறையூர், திருச்சியில் திடீர் மழை- 20 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

Published On 2021-06-09 10:56 GMT   |   Update On 2021-06-09 10:56 GMT
துறையூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலும் நேற்று மாலை திடீரென்று இடி-மின்னலுடன் பலத்த மழைபெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது.
துறையூர்:

திருச்சியில் கடந்த சில நாட்களாக பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும், இரவு நேரத்திலும் பகல்பொழுது அடித்த வெயிலுக்கு ஏற்ப, புழுக்கமும் அதிகமாக இருந்து வருகிறது. நேற்றும் வழக்கம்போல் பகலில் அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்தது.

இந்தநிலையில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை திடீரென பெய்ய தொடங்கியது. திருச்சி மாநகரின் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மழையில் நனைந்து விடாமல் இருக்க ஆங்காங்கே குடை பிடித்தபடி சென்றனர். சிறிது நேரம் மட்டுமே பெய்த மழையால் பகல் நேரத்தில் சுட்டெரித்த வெயிலின் தாக்கத்தை ஓரளவுக்கு தணித்தது.

இதுபோல் துறையூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலும் நேற்று மாலை திடீரென்று இடி-மின்னலுடன் பலத்த மழைபெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதில் பெரமங்கலம் ஊராட்சி மணியம்பட்டி கிராமத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் திடீரென்று வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

அப்பகுதியில் கட்டப்பட்ட சிறிய பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. வீடுகளில் இருந்து தண்ணீரை பாத்திரத்தில் எடுத்து வெளியே ஊற்றும் வண்ணம் இருந்தார்கள்.

அப்போது மழைநீரில் நீந்தியபடி பாம்பு ஒன்று அங்கிருந்த வீட்டுக்குள் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News