செய்திகள்
நிலக்கடலை

ரூ.10 கோடிக்கு நிலக்கடலை வர்த்தகம்

Published On 2021-06-09 08:25 GMT   |   Update On 2021-06-09 08:25 GMT
நடப்பாண்டு நிலக்கடலை சாகுபடி தொடங்கியுள்ளது. இம்முறை தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவிநாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, சேவூர், நம்பியூர், அந்தியூர், கோபி, பல்லடம், பெருந்துறை மற்றும் நீலகிரி, ஈரோடு மாவட்டங்களின் எல்லையில் உள்ள தெங்குமரஹடா பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் பெருமளவில் ஈடுபடுகின்றனர். அவர்கள் திங்கட்கிழமைதோறும் சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடக்கும் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

இங்கு கடந்த நிதியாண்டில் 2,037 மெட்ரிக் டன் நிலக்கடலை ஏலத்தின் மூலம் விற்கப்பட்டுள்ளது. இதன் வர்த்தக மதிப்பு ரூ.10.72 கோடி. இக்கால கட்டத்தில் நிலக்கடலைக்கு ஓரளவு சந்தை இருந்ததால் சராசரி விலை கிலோ ரூ. 70  வரை இருந்தது. 1,903 விவசாயிகள் , 387 வியாபாரிகள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த மார்ச் முதல் மே வரை ஊரடங்கால் சேவை வரி வசூலில் இருந்து வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதன் காரணமாக ரூ.3  கோடி  அளவுக்கு வருவாய் குறைவு ஏற்பட்டது என விற்பனைக்கூட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கடந்த 2019-2020ம்  நிதியாண்டில் மொத்தம் 1,850 மெட்ரிக் டன் நிலக்கடலை வரத்தாக இருந்தது. இக்கால கட்டத்தில், நிலக்கடலை விலை சரிந்தது. கிலோவுக்கு சராசரியாக ரூ.55 விலை கிடைத்தது. ரூ.10கோடி  அளவுக்கு வர்த்தகம் நடந்தது.

நடப்பாண்டு நிலக்கடலை சாகுபடி தொடங்கியுள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மீண்டும் நிலக்கடலை சீசன் களை கட்டும். இம்முறை தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News