செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

Published On 2021-06-05 08:02 GMT   |   Update On 2021-06-05 08:02 GMT
சசிகலா தொண்டர்களுடன் தொலைபேசியில் தற்போது பேசி வருவதால் அவர் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருவார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
சென்னை: 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளரான எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆனாலும் இருவரும் இதை மறுத்து வருகின்றனர். செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம் எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமைக்கழகத்துக்கு நேற்று எடப்பாடி பழனிசாமி திடீரென்று சென்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. இது பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் கிரகபிரவேசம் நிகழ்ச்சி நடப்பதால் அவர் வரவில்லை என்று தெரிவித்தார்.

இன்றைக்கு நல்ல நாள் என்பதால நான் கட்சி அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளை சந்தித்தேன் என்றும் விளக்கம் அளித்தார். 

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சென்று சந்தித்து பேசினார். 

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் , ஆர்.காமராஜ், மாவட்ட செயலாளர் பாலகங்கா ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். 



சசிகலா தொண்டர்களுடன் தொலைபேசியில் தற்போது பேசி வருவதால் அவர் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருவார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. 

அந்த சூழ்நிலை வரும் போது ஓ.பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி சென்று சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News