செய்திகள்
தமிழக சட்டசபை

தமிழக அரசின் நிதிநிலை பற்றி சட்டசபையில் வெள்ளை அறிக்கை தாக்கல்

Published On 2021-06-01 02:51 GMT   |   Update On 2021-06-01 02:51 GMT
அடுத்த வாரம் சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. அப்போது தமிழக அரசின் நிதிநிலை பற்றி சட்டசபையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
சென்னை:

தமிழக சட்டசபையில் கடந்த அ.தி.மு.க. அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தது. அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்து தி.மு.க. ஆட்சி அமைந்தது. அதைத் தொடர்ந்து தமிழக சட்டசபை 2 நாட்கள் கூடியது. முதல் நாள் கூட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.க்களாக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

சட்டசபையில் 2-ம் நாள் கூட்டத்தில் சபாநாயகராக அப்பாவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து சட்டசபை கூடும் மறுதேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் 16-வது சட்டசபை இம்மாதம் 2-ம் வாரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



முதல் நாளில் கவர்னர் உரையாற்றுவார். பின்னர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும். 3-ம் நாளில் அந்த விவாதத்திற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார்.

இந்த கூட்டத்தொடரில் தமிழக அரசிடம் உள்ள நிதி நிலை பற்றிய வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது. கொரோனா தொற்று பரவலினால் ஏற்கனவே தமிழக அரசின் நிதிநிலை நெருக்கடிக்கு உள்ளானது.

கொரோனா தொற்றின் முதல் அலை வீசிய காலகட்டத்தில் பல மாதங்களாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு வந்தனர்.

ஆனால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அரசியல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதிலிருந்தே 2-ம் அலை வீசத் தொடங்கியது. பின்னர் தொற்றின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்துகொண்டே சென்றது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் தொற்று சற்று குறைந்து வருகிறது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் மக்களுக்கு பொருளாதார உதவிகளைச் செய்வதற்காக அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதோடு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருந்து, மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், மருத்துவமனைகளில் புதிய பிரிவுகளை தொடங்குதல் என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் அரசின் கஜானா தற்போது காலியான நிலையில்தான் உள்ளது. எனவே முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் தங்களால் ஆன உதவியை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதன் மூலம் அரசுக்கு ஓரளவு நிதி கிடைத்து வருகிறது.

மேலும், சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசின் நிதி நிலை பற்றியும், மாநிலத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவையில் உள்ள நிதியின் அளவு குறித்தும் பேசினார்.

இந்த நிலையில் தமிழக அரசின் நிதி நிலை பற்றி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் சிறப்பு செயலாளர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசினார். அப்போது தமிழக அரசின் நிதி நிலை பற்றிய வெள்ளை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கருத்து பேசப்பட்டுள்ளது.

எனவே ஜூன் 2-ம் வாரத்தில் கூடும் கவர்னர் உரைக்கான கூட்டத்தொடரில் இந்த வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News