செய்திகள்
முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை உள்பட 3 மாவட்டங்களில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

Published On 2021-05-29 22:49 GMT   |   Update On 2021-05-29 22:49 GMT
தமிழ்நாட்டில் கொரோனா பரவலில் சென்னையை பின்னுக்கு தள்ளி மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது.
கோவை:

தமிழ்நாட்டில் கொரோனா பரவலில் சென்னையை பின்னுக்கு தள்ளி மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது. நாள்தோறும் தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை கடக்கிறது. தினசரி 30 பேருக்கு மேல் இறப்பு உள்ளது.

கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கோவை உள்பட 6 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிகாட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், கொரோனா தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி ஆகியோர் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழக அரசின் முதன்மை செயலாளர் சித்திக், கோவை மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டு நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் வருகிறார்.

இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இரவு கோவை வந்தார். பின்னர் அவர் கார் மூலம் ஈரோடு சென்றார். அங்குள்ள காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.

அங்கு அவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 10.30 மணிவரை ஆய்வு செய்கிறார். அதன்பிறகு அவர், திருப்பூர் குமரன் கல்லூரியில் காலை 11 மணி முதல் 11.30 மணிவரை ஆய்வு செய்கிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோவை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பகல் 12.30 மணி முதல் 1.30 மணிவரை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆய்வு செய்கிறார். அங்கு ஆக்சிஜன் படுக்கை வசதிகளை கூடுதலாக அமைப்பது, நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை அதிகரிப்பது குறித்து மருத்துவ அதிகாரிகளு டன் ஆலோசனை செய்கிறார். இதையடுத்து அவர், மதியம் 2 மணிக்கு ரெட்பீல்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.

பின்னர் மாலை 4.40 மணி முதல் மாலை 6 மணி வரை கோவை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட்டு, பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.

அதன் பிறகு மாலை 6.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்குகிறார்.

இதையடுத்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News