செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

கோவையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Published On 2021-05-24 11:44 GMT   |   Update On 2021-05-24 11:44 GMT
கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட சிறப்பு மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், 40 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் தேவை உள்ளது.

ஆனால், தற்போது மாவட்டத்தில் 3,700 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே உள்ளன. இந்த படுக்கைகள் அனைத்தும், நிரம்பியுள்ளதால், ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் கிரடாய் அமைப்பு இணைந்து, கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டது.

இதனை தி.மு.க.,மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.,ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் சிறப்பு மையத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ள வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள், டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இதில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து டாக்டர்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்டுள்ளார். இந்நிலையில், கிரடாய் அமைப்பின் உதவியுடன், 200 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கிரடாய் அமைப்பு சென்னையில் 1,500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம், ஈரோட்டில் 500, படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையத்தை ஏற்படுத்தியுள்ளனர். இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் முறையாக கடைபிடித்து, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் நாகராஜன், மாநகராட்சி கமி‌ஷனர் குமாரவேல் பாண்டியன், கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா கவுண்டர், இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், துணை அமைப்பாளர் திருமலை ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News