செய்திகள்
கேஎஸ்.அழகிரி

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது - கேஎஸ்.அழகிரி

Published On 2021-05-23 13:17 GMT   |   Update On 2021-05-23 13:17 GMT
அண்டை நாடான இலங்கையில் இந்தியாவின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருகிறது. மாறாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி  விடுத்துள்ள அறிக்கையில், 

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி 2014 இல் பதவியேற்றபோது அதிபர் ராஜபக்சேவை வரவழைத்து சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து அன்று பதவியேற்றுக்கொண்டதை எவரும் மறந்திட இயலாது. பா.ஜ.க. ஆட்சியின் தவறான வெளியுறவு கொள்கை காரணமாக 136 கோடி மக்கள் தொகை கொண்ட உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிற இந்தியாவை 2 கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட இலங்கை நாடு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது.

அண்டை நாடான இலங்கையில் இந்தியாவின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருகிறது. மாறாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் சீன நாடு 1.4 பில்லியன் டாலர் முதலீட்டில் கொழும்பு துறைமுக திட்டத்திற்கான மசோதாவை இலங்கை நாடாளுமன்றம் பலத்த எதிர்ப்பிற்கு இடையே நிறைவேற்றியிருக்கிறது. அந்த திட்டத்திற்கான அறிவிப்பு பலகையில் கூட சிங்களம், ஆங்கிலம் மற்றும் மாண்டரின் மொழி இடம்பெற்றிருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கிறபோது சீனாவின் காலனி நாடாக இலங்கை மாறிவருகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய போக்குகள் காரணமாக இந்தியாவின் புவிசார் அரசியலுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி கவலைப்பட்டதாக தெரியவில்லை. உலக நாடுகள் மத்தியில் தமது பிம்பத்தை கட்டமைக்கிற பணியில் தீவிரம் காட்டுகிற பிரதமர் மோடி அண்டை நாடான இலங்கையில் இந்தியாவின் கட்டுப்பாட்டை நாளுக்கு நாள் இழந்து வருவது நமது வெளியுறவு கொள்கையின் மிகப்பெரிய தோல்வியாகவே கருதவேண்டியுள்ளது. பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு காரணாமாக இலங்கையில் வாழுகிற தமிழர்களின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்பட்டு வருகிறது.



இலங்கை தமிழர்களின் உரிமைகளை பறிக்கிற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துகிற முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News