செய்திகள்
ராஜேஷ் லக்கானி

தமிழ்நாடு மின் வாரிய தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்

Published On 2021-05-17 01:56 GMT   |   Update On 2021-05-17 01:56 GMT
ராஜேஷ் லக்கானி, நேர்மை, திறமை, கடின உழைப்பு, எல்லோரிடமும் இனிமையாக பழகும் தன்மை ஆகியவற்றை ஒருங்கே பெற்ற சிறப்புரிக்குரிய அதிகாரி ஆவார்.
சென்னை:

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய தலைவராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஆவண காப்பகம், வரலாற்று ஆராய்ச்சித் துறை கமிஷனரான முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின்சார வாரியம்- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்படுகிறார்.

இப்பதவியில் இருந்த பங்கஜ்குமார் பன்சாலுக்கு பதிலாக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜேஷ் லக்கானி, தமிழக அரசில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர்-செயலர், வீட்டு வசதி, வேளாண்மை துறை, எரிசக்தி துறை போன்ற பல்வேறு முக்கிய துறைகளின் செயலாளராக சிறப்பாக பணியாற்றியவர். சென்னை மாநகராட்சி கமிஷனர், கன்னியாகுமரி, தேனி மாவட்ட கலெக்டராக பணியாற்றி, அப்பதவியை அலங்கரித்தவர்.

ராஜேஷ் லக்கானி, நேர்மை, திறமை, கடின உழைப்பு, எல்லோரிடமும் இனிமையாக பழகும் தன்மை ஆகியவற்றை ஒருங்கே பெற்ற சிறப்புரிக்குரிய அதிகாரி ஆவார்.
Tags:    

Similar News