செய்திகள்
மாநகராட்சி அருகே இன்று வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்

அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கை தீவிரம்- விதிமுறைகளை மீறிய 1000 கடைகளுக்கு சீல்

Published On 2021-05-16 06:23 GMT   |   Update On 2021-05-16 06:23 GMT
கொரோனா விதிகளை மீறி கடைகளை திறந்தது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் செயல்பட்டது, முகக்கவசம் அணியாதது போன்ற குற்றங்களுக்காக அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

வருகிற 24-ந்தேதி வரை கடைபிடிக்கப்பட உள்ள இந்த முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் ஊரடங்கை மீறி கடைகளை திறந்து வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்தனர்.

பெரிய ஜவுளிக்கடைகளை பின்பக்கமாக திறந்து வைத்தும் வியாபாரம் செய்தனர். இதுபோன்ற கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இப்படி கொரோனா விதிகளை மீறி கடைகளை திறந்தது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் செயல்பட்டது, முகக்கவசம் அணியாதது போன்ற குற்றங்களுக்காகவும் அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னையில் இதுபோன்ற விதிகளில் ஈடுபட்ட 239 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரூ.1 கோடியே 44 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரூ.4 கோடிக்கும் அதிகமாக அபராதமும் வசூலிக்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளதன் பேரில் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் வருமாறு:-

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் ஊரடங்கு விதிகளை மீறி இயங்கிய சுமார் 110 கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இறைச்சி, மளிகை கடைகள் உள்பட 8 கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 10 மணிக்கு பிறகும் இறைச்சி வியாபாரம் நடத்திய 6 கடைகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இதில் 2 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை, திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட சுமார் 192 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று மாஸ்க் அணியாமல் வந்த 551 பேர்களிடம் தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காத 46 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 1200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 56 கடைகள் சீல் வைக்கப்பட்டது. அபராத தொகையாக ரூ.28 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் விதிகளை கடைபிடிக்காமல் கடைகளை திறந்த 65 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்றதாக நேற்று ஒரே நாளில் 94 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 94 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முககவசம் அணியாமல் சென்ற 387 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் செயல்பட்ட 11 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 4 நாட்களில் மட்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத டீக்கடைகள் உள்பட 10 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி செயல்பட்டதாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்ட பகுதியில் இதுவரை 1,200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல் சேலம் மாநகர பகுதியில் 1000 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் மொத்தமாக 2 ஆயிரத்து 200பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.6 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 25-க்கும் மேற்பட்ட கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மார்த்தாண்டம் பகுதியில் மட்டும் 350 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக 2 திருமண மண்டபங்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது. இதுபோல ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 51 ஆயிரத்து 997 நபர்களிடம் இருந்து அபராதமாக ரூ. 1 கோடியே 7 லட்சத்து 64 ஆயிரத்து 696 வசூலிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதற்காக 22 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார். சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக ரூ.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முழுவதும் ரூ.1 கோடியே 6 லட்சத்து 31 ஆயிரத்து 805 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில் மாவட்டம் முழுவதும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றாத 25 கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றியதாக 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதே போல் முககவசம் அணியாமல் சென்றது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது என 50 பேருக்கு தலா ரூ. 200 விதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை மாநகரில் நேற்று மட்டும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றதாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மதுரை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 32 பேரின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

மதுரை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் வருவாய், சுகாதாரத்துறை அதிகாரிகள் முக கவசம் அணியாமல் திரிந்ததாக 403 பேரிடம் தலா ரூ.200 வீதம் 80 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதித்து உள்ளனர்.

கோவை மாநகரப்பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2,201 கடைகளுக்கு ரூ. 2½ லட்சம் அபராதம் விதித்துள்ளனர். மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரிய ஜவுளிக்கடைகள், நகை கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி வாடிக்கையாளர்களை பின்புற வாசல் வழியாக அனுப்பி வியாபாரம் செய்த 25 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்த கடைகளுக்கு ரூ. 10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளனர்.

முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 1,300 பேர் மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று வாகனங்களில் சுற்றிதிரிந்த 2,400 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 18 பேரின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதுபோன்ற நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News