செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

Published On 2021-05-14 02:42 GMT   |   Update On 2021-05-14 02:42 GMT
தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ‘ரெட்' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அந்தவகையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (வெள்ளிக்கிழமை) தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இந்த தாழ்வு மண்டலம் நாளை (சனிக்கிழமை), நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) புயலாக மாறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ‘தக்தே' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. மியான்மர் நாடு பரிந்துரைத்துள்ள ‘தக்தே' என்பது அந்நாட்டில் உள்ள ஒரு பல்லி இனம் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் கன மழை முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.

தாழ்வு மண்டலமாக உருவானதன் காரணமாக, நாளை தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகனமழை பெய்யும் பகுதிகளில் நிர்வாக ரீதியாக விடப்படும், ரெட் அலர்ட் அறிவிப்பும் விடுக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் அதிகனமழை பெய்யும் பகுதிகளில் 20 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகும்.
Tags:    

Similar News