செய்திகள்
தென்காசி பழைய பஸ்நிலையத்தில் காய்கறிகள் விற்பனை நேற்று தொடங்கியபோது எடுத்த படம்.

கொரோனா முழு ஊரடங்கு: தென்காசி பஸ் நிலையத்தில் காய்கறிகள் விற்பனை தொடங்கியது

Published On 2021-05-13 13:20 GMT   |   Update On 2021-05-13 13:20 GMT
கொரோனா முழு ஊரடங்கு காரணமாக தென்காசி பஸ்நிலையத்தில் காய்கறிகள் விற்பனை நேற்று தொடங்கியது.
தென்காசி:

கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தொடர்ந்து தீவிரமாக வீசி வருகிறது. இதனை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மதியம் 12 மணி வரை மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு அவை செயல்பட்டு வருகின்றன. இதில் கூடுதல் தளர்வுகளாக பழ கடைகள், நாட்டு மருந்து கடைகள் ஆகியனவும் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தென்காசியில் உள்ள தினசரி சந்தையில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு கடந்த முறை கொரோனா ஊரடங்கின்போது பஸ்நிலையங்களில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டது போன்று தற்போதும் இதனை அமைக்க மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜான், சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில் ஆகியோர் தென்காசி பழைய பஸ் நிலையத்தில் காய்கறி கடைகளை அமைக்க ஏற்பாடு செய்தனர். மொத்த விற்பனையை தினசரி சந்தையிலேயே நடத்துவதற்கும் ஏற்பாடு செய்தனர்.

அதன்படி நேற்று காலையில் இருந்து தென்காசி பழைய பஸ்நிலையத்தில் காய்கறி வியாபாரிகள் காய்கறி கடைகளை அமைத்தனர். மொத்தம் 18 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடைகளுக்கு வரும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வியாபாரிகளும் முக கவசம் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் நேற்று பழைய பஸ்நிலையத்தில் காலையில் இருந்து மதியம் 12 மணி வரை காய்கறிகளை வாங்கிச் சென்றனர். நேற்று 3-வது நாளாக மதியம் 12 மணிக்கு மேல் தென்காசியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மருந்து கடைகள் திறந்து இருந்தன. உணவகங்களில் பார்சல்கள் வழங்கப்பட்டன. ஆங்காங்கே இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சில கார்கள் சென்று வந்ததை பார்க்க முடிந்தது.

போலீசார் எவ்வளவோ எடுத்துக் கூறினாலும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகிறார்கள். நோய்த்தொற்றின் வீரியத்தை பொதுமக்கள் இன்னும் உணரவில்லை என்றும், அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றினால் தான் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News