செய்திகள்
அபராதம்

மேட்டுப்பாளையத்தில் அரசின் விதிமுறையை மீறிய பனியன் நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Published On 2021-05-13 09:26 GMT   |   Update On 2021-05-13 09:26 GMT
மேட்டுப்பாளையம் ராஜபுரம் பகுதியில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட பனியன் நிறுவனத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்:

உலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.

இதனையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் பகுதியில் தொற்று பரவுவதைத் தடுக்க நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வண்ணம் நகரம் முழுவதும் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

நகராட்சி பணியாளர்கள் ஊரடங்கு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று தீவிர கண்காணிப்பின் செலுத்தப்படுகிறது. இதற்காக நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் துப்புரவு ஆய்வாளர்கள் கொண்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நகராட்சி ஆணையர் சுரேஷ் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில் குமார் ஆரோக்கியராஜ் மற்றும் பணியாளர்கள் நகரில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முகக்கவசம் அணியாத ஸ்வீட் ஸ்டால், பேக்கரி மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூபாய் 11 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி வீட்டைவிட்டு வெளியே வராமல் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தங்களையும் தங்களைச் சார்ந்தவர்களையும் பாதுகாத்திட முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேட்டுப்பாளையம் தாசில்தார் ‌ஷர்மிளா உத்தரவின்பரில் துணை வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் மேட்டுப்பாளையம் நகரம் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டத்துக்கு உட்பட்ட சிறுமுகை காரமடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மேட்டுப்பாளையம் ராஜபுரம் பகுதியில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட பனியன் நிறுவனத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும் அரசின் ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியும், எச்சரிக்கையும் விடப்பட்டது.

Tags:    

Similar News