செய்திகள்
கொரோனாவால் பலியான சந்திராவுக்கு நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுசீந்திரன், ஈம சடங்கை செய்த போது எடுத்த படம்.

கொரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த நகராட்சி அதிகாரி

Published On 2021-05-13 07:26 GMT   |   Update On 2021-05-13 07:26 GMT
தருமபுரியில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை நகராட்சி அதிகாரி முன்னின்று ஈம சடங்கு செய்தார். உறவினர்கள் கைவிட்ட நிலையில் அதிகாரியின் மனிதநேயத்தை பொது மக்கள் பாராட்டினர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா (வயது 48). இந்த நிலையில் இவரது கணவர், மகன் ஆகியோருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திராவுக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து சந்திராவின் உடலை, கொரோனா விதிமுறைப்படி பேக்கிங் செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் சந்திராவின் உறவினர்கள் யாரும், உடலை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை.

இதுபற்றி தருமபுரி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுசீந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து சந்திராவின் உடலை பார்த்தார்.

ஏற்கனவே சந்திராவின் கணவர் மற்றும் மகன் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உறவினர்களும் கைவிட்டதால் தானே இறுதி சடங்கை முன்னின்று நடத்த அவர் முடிவு செய்தார்.

அதன்படி ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த சந்திராவின் உடலுக்கு சுகாதார ஆய்வாளர் சுசீந்திரன், முறைப்படி ஈம சடங்கு செய்தார். இந்த சோக காட்சி, அங்கு நின்றவர்களின் கண்கள் கண்ணீரால் குளமாக்கியது.

இதையடுத்து சந்திராவின் உடல், தருமபுரி மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. 
Tags:    

Similar News