செய்திகள்
தற்கொலை

தாய் தீக்குளித்து தற்கொலை: குடும்ப தகராறில் தீ வைக்கப்பட்ட இரட்டைக்குழந்தைகளும் பலி

Published On 2021-05-11 11:25 GMT   |   Update On 2021-05-11 11:25 GMT
தென்காசி அருகே குடும்ப தகராறில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடையம்:

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வேம்படி காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவர் ஜோதிடம் பார்த்து வந்தார்.

இவரது மனைவி பார்வதி (38). இவர் வீட்டில் இருந்து பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.

இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. அன்னலெட்சுமி (4), கலைமதி (4) என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்வதியின் அண்ணன் மனைவிக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை பார்க்க போவதாக, பார்வதி கணவரிடம் கூறினார். அதற்கு கண்ணன், ‘தற்போது கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் இப்போது போகவேண்டாம், பின்னர் பார்த்துக்கொள்ளலாம்’ என்று கூறி உள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கும் இடையே வாக்கு வாதம், தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த கண்ணன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி தனது இரண்டு குழந்தைகள் மீதும் மண்எண்ணைய் ஊற்றிக்கொண்டு, தன்மீதும் மண்எண்ணைய் ஊற்றி தீவைத்தார்.

இதில் 3 பேர் உடலும் தீப்பற்றி எரிந்தது. அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பார்வதி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

2 குழந்தைகளும் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடினர். உடனடியாக அவர்களை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை சிகிச்சை பலன் இல்லாமல் 2 பெண் குழந்தைகளும் பலியானார்கள்.

இதுகுறித்து துணைபோலீஸ் சூப்பிரண்டு பொன்னிவலவன், இன்ஸ்பெக்டர் அங்கையற்கன்னி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

திருமணமாகி 6 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இதுகுறித்து சப்-கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் இன்று சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News