செய்திகள்
காலியாக காட்சி அளிக்கும் மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை

தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக முழு ஊரடங்கு

Published On 2021-05-11 06:17 GMT   |   Update On 2021-05-11 06:17 GMT
தமிழகம் முழுவதும் குறைவான அளவிலேயே ஊரடங்கை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று 30 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.
சென்னை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முதல் நாளான நேற்று காலையில் மக்கள் வழக்கம் போல வெளியில் நடமாடினார்கள். இன்றும் அதுபோன்று மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது.

காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறந்து இருந்ததால் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் வெளியில் வந்தனர்.

நேற்று பிற்பகலில் வாகன போக்குவரத்து இன்றி மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது. மதியம் 12 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்ட பிறகே மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள் முடங்கினார்கள்.

இருப்பினும் பால் வண்டிகள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் எப்போதும் போல ஓடியது.

கொரோனா ஊரடங்கை மீறி வெளியில் வருபவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள கூடாது என்று காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எந்த இடங்களிலும் போலீசார் கெடுபிடி காட்டவில்லை.

வெளியில் வந்த பொதுமக்களிடம் சீக்கிரம் வீட்டுக்கு செல்லுமாறு மட்டுமே அறிவுறுத்தினர்.



தமிழகம் முழுவதும் குறைவான அளவிலேயே ஊரடங்கை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று 30 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

இதற்கு முன்பு முழு ஊரடங்கின்போது போலீசார் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் போட்டது குறிப்பிடத்தக்கது.

வாகனங்களை புகைப்படம் எடுத்து வழக்கு மட்டுமே போட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததால் நேற்று போலீசார் அனைத்து இடங்களிலும் அதுபோன்று செயல்பட்டனர். யாருடைய வாகனங்களையும் பறிமுதல் செய்யவில்லை.

ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களின் வாகனங்களை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்த போலீசார் வாகனங்களை உரிமையாளர்களிடமே ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும்போது, “கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அதிகளவு வெளியில் வருவதை தாங்களாகவே தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.
Tags:    

Similar News