செய்திகள்
பலி

கொரோனா படுக்கை இல்லாததால் ஆம்புலன்சில் காத்திருந்த பெண் உள்பட 3 பேர் பலி

Published On 2021-05-11 02:41 GMT   |   Update On 2021-05-11 02:41 GMT
கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் குவிந்து வருகிறார்கள்.
திருப்பூர்:

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 281 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 150 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் இருப்பவை. இந்த நிலையில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர்.

இவர்களது உடல்நிலையை கருத்தில்கொண்டு தற்காலிக சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஒருதிருமண மண்டபம் மற்றும் அவினாசியில் உள்ள தனியார் கல்லூரி ஆகியவற்றிக்கு சிகிச்சைக்கு அனுப்புகின்றனர். அதேநேரம் லேசான அறிகுறி இருக்கிறவர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு வருவது வழக்கம். தொற்று அதிகம் உள்ளவர்கள் மட்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் ஆக்சிஜன் தேவைப்படுகிறவர்கள் ஆக்சிஜன் படுக்கைகளிலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் கொரோனா வார்டுகளிலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் குவிந்து வருகிறார்கள். இதனால் அங்குள்ள படுக்கைகளும் விறு, விறுவென நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பூரை சேர்ந்த 3 பேர் படுக்கை வசதி இல்லாததால் ஆக்சிஜனுடன் ஆம்புலன்சில் காத்திருந்த போது பலியாகி உள்ளனர்.

திருப்பூர் பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், 40 வயது பெண், 43 வயது ஆண் என 3 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது கொரோனா படுக்கைகள் ஏற்கனவே நிரம்பி இருந்ததால் கொரோனா படுக்கைக்காக அவர்கள் காத்திருந்த நிலையில் பலியாகியுள்ளனர்.

இதுபற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி கூறியதாவது:-

கொரோனா படுக்கைகள் இருக்கிறதா? என யாரும் தொடர்புகொண்டு கேட்காமல் வருவதால், ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதுபோல் தனியார் மருத்துவமனைகளில் இருந்து கொரோனா நோயாளிகள் பலரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவ்வாறு அனுப்பப்படுகிறவர்கள் கொரோனா தொற்று மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் சிலர் இருக்கிறார்கள். ஆம்புலன்சில் காத்திருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் உடலில் பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News