செய்திகள்
அமைச்சர் ஐ.பெரியசாமி

மே 15 முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,000 வழங்கப்படும் – அமைச்சர் ஐ.பெரியசாமி

Published On 2021-05-10 12:19 GMT   |   Update On 2021-05-10 12:19 GMT
தமிழகத்தில் உள்ள 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவனையாக ரூ. 2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார்.
சென்னை:

சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார்.

அவர் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். கொரோனா பாதிப்பால் மக்கள் சிரமப்படும் இந்த சூழலில் ரூ.4 ஆயிரத்தில் இந்த மாதமே முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் வகையில் ஆணை பிறப்பித்தார்.

இதைதொடர்ந்து ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறும்போது, 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கியதை தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் ரே‌ஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மே 15 முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,000 வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். 

இதையொட்டி இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. ரே‌ஷன் கடை ஊழியர்கள் அந்தந்த பகுதிகளுக்கு வந்து ரே‌ஷன் கார்டு எண் அடிப்படையில் டோக்கன் வழங்கி வருகின்றனர். டோக்கன் 12-ந்தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News