செய்திகள்
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை- கலெக்டர் தகவல்

Published On 2021-05-10 11:09 GMT   |   Update On 2021-05-10 11:09 GMT
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுபவர்கள் அறிகுறியின் ஆரம்ப நிலையிலேயே உரிய மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறுவதன் மூலம் விரைவில் குணமடையலாம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளுக்கு ஊராட்சி அளவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

ஊரக பகுதிகளில் தனிநபர் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக அந்த பகுதி சுகாதாரத்துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

வைரஸ் தொற்று ஏற்படுபவர்கள் அறிகுறியின் ஆரம்ப நிலையிலேயே உரிய மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறுவதன் மூலம் விரைவில் குணமடையலாம். ஆனால் சிலர் அறியாமையினாலோ அல்லது அலட்சியப் போக்கு காரணமாகவோ வைரஸ் தொற்று முற்றிய நிலையில் மருத்துவமனை வரும் சூழ்நிலையில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்களது ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் இடங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் அமைத்து கண்காணித்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

அதே நேரத்தில், கட்டுப்பாட்டு பகுதியில் இருப்போருக்காக அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி அவர்களது வீடுகளுக்கே கிடைத்திடும் வகையில் உறுதி செய்ய வேண்டும்.. ஊரக பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்து தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.

கூடுதல் விவரங்கள், உதவிக்கு கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தை 045671077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், மகளிர் திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News