செய்திகள்
முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது- பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு

Published On 2021-05-10 03:52 GMT   |   Update On 2021-05-10 03:52 GMT
முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே ஓடியதால் சாலைகள் பரபரப்பின்றி காணப்பட்டது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

இதையடுத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார்.

அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு கடை பிடிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களும் (சனி, ஞாயிறு) அனைத்து கடைகளையும் திறந்துவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. வருகிற 24-ந்தேதி வரை 2 வாரங்களுக்கு இந்த ஊரடங்கு கடை பிடிக்கப்படும். முழு ஊரடங்கு காரணமாக இன்று பஸ், கார், ஆட்டோக்கள் ஓடவில்லை.

அரசு துறைகளில் மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் தவிர அனைத்து அலுவலகங்களும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் பெரும்பாலான அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை.

பெரிய கடைகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள், அழகு நிலையங்கள், சலூன்கள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை பூங்காக்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை முழுமையாக மூடப்பட்டன.



வழிபாட்டு தலங்களில் திருவிழா, குடமுழுக்கு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் இல்லாமல் கோவில்களில் பூஜைகள் மட்டும் நடைபெற்றன.

மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஆகியவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின.

பால் வண்டிகள், பத்திரிகை வாகனங்கள், மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவை தடையின்றி ஓடின.

முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே ஓடியதால் சாலைகள் பரபரப்பின்றி காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஐ.டி. நிவனங்களில் பணிபுரிவோர் வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனால் சென்னையில் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணிகளை மேற்கொண்டனர்.

அத்தியாவசிய கடைகளை தவிர வேறு எந்த கடைகளையும் திறந்து வைக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருந்ததால் பெரிய ஜவுளி கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளுமே மூடப்பட்டு இருந்தன.

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

முழு ஊரடங்கில் தடையை மீறி தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட் காசிமேடு மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின் பற்றாதவர்கள் உள்ளிட்டோர் மீதும், தேவையின்றி வெளியில் வந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னையில் 30 பெரிய மேம்பாலங்கள் மூடப்பட்டு இருந்தன. இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் மேம்பாலங்களை மூடி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த ஆண்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டபோது பல இடங்களில் போலீசார் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் ஊரடங்கு தடையை மீறி வெளியில் வருபவர்களிடம் கெடுபிடி காட்டக்கூடாது என்று டி.ஜி.பி. திரிபாதி, சென்னை போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் போலீசாருக்கு அறிவுரை வழங்கி இருந்தனர்.

இதனை ஏற்று இன்று பல இடங்களில் தடையை மீறி வெளியில் சுற்றியவர்களை பிடித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பினர். கெடுபிடியுடன் நடந்து கொள்ளவில்லை. இதற்கு மாறாக கொரோனா விழிப்புணர்வு பிரசாரங்களை தீவிரமாக மேற்கொண்டனர்.

தடையை மீறி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்களை இன்று போலீசார் புகைப்படம் எடுத்து வழக்கு போட்டனர். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் எந்த வாகனங்களையும் சாலையில் பறிமுதல் செய்யவில்லை. வழக்கு போட்ட சில நிமிடங்கள் கழித்து வாகனங்களை விடுவித்தனர்.

காவல் துறையிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களிடம் விசாரணை நடத்தும் போலீசார் உரிய முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப போலீசார் முக கவசம் அணிந்து பணியாற்றினர். விசாரணையின்போது சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடித்தனர்.

சென்னையில் 10 ஆயிரம் போலீசாரும், தமிழகம் முழுவதும் 1 லட்சம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News