செய்திகள்
கோப்புபடம்

ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி - நாளை முதல் வீடுகளில் ‘டோக்கன்’ வினியோகம்

Published On 2021-05-09 08:34 GMT   |   Update On 2021-05-09 08:34 GMT
தேர்தலில் வெற்றி பெற்று கடந்த 7-ந் தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கான உத்தரவில் முதல் கையெழுத்தை போட்டார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று கடந்த 7-ந் தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கான உத்தரவில் முதல் கையெழுத்தை போட்டார்.

இதையடுத்து நாளை (திங்கட்கிழமை) முதல் கொரோனா நிவாரண உதவி வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக இந்த மாதம் ரூ.2 ஆயிரமும், அடுத்த மாதம் மீதி ரூபாய் ரூ.2 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ரே‌ஷன் கடைகளில் முற்பகல் நேரத்தில் மட்டும் இந்த பணத்தை வழங்குவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டோக்கன் வினியோகம் செய்து, அதன் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களை வரவழைத்து கொரோனா நிவாரண தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி தமிழகம் முழுவதும் 2.7 கோடி குடும்பங்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட உள்ளது.

ரூ.2 ஆயிரம் நிவாரண உதவிக்கான டோக்கன்கள் நாளை (10-ந் தேதி) முதல் வழங்கப்படுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நாளை தொடங்கி வைக்கிறார்.

இதன் பின்னர் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெறுகிறது. இந்த டோக்கன்களை ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரிசி ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கும் தவறாமல் நிவாரணம் கிடைக்கும் வகையில் மாவட்ட கலெக்டர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக உணவுப் பொருள் வழங்கல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

நாளை காலை முதல் வருகிற 12-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் ரே‌ஷன் கடை பணியாளர்கள் கார்டு நம்பர் அடிப்படையில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று டோக்கன்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதற்கான பணிகளை ரே‌ஷன் கடை ஊழியர்களும் தொடங்கி இருக்கிறார்கள்.

நாள் ஒன்றுக்கு தலா 200 குடும்பத்தினர், நிவாரண தொகை பெறும் வகையில் டோக்கன்களை வழங்க ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை ரூ.2 ஆயிரம் என்கிற பெயரில் டோக்கன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் கடையின் எண், பெயர், அட்டைதாரர் பெயர், கிராமம், தெரு, நிவாரண நிதி வழங்கும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

டோக்கன் எண்ணை குறிப்பிடுவதற்கு தனியாக காலமும் இடம்பெற்றுள்ளது. ‘‘நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம். தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்போம்’’ என்கிற கொரோனா விழிப்புணர்வு வாசகமும் டோக்கனில் இடம்பெற்றுள்ளது.

இந்த டோக்கன்களை தான் நாளைமுதல் வீடு, வீடாக ரே‌ஷன் கடை ஊழியர்கள் வினியோகிக்க உள்ளனர்.

நாளை முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக அரிசி கார்டு வைத்து இருககும் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. இதன் பிறகு வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.

ரே‌ஷன் கடைகளில் காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை சமூக இடைவெளியை கடைபிடித்து டோக்கன் அடிப்படையில் மட்டுமே நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளனர்.

நான்கு 500 ரூபாய் நோட்டுகள் அல்லது ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஆகியவற்றை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கவருக்குள் வைத்து பணத்தை கொடுக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2.7 கோடி குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரத்து 153.39 கோடி இந்த மாதத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளிடப்பட்டுள்ளது.



இந்த பணம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கூட்டுறவு சங்கங்களுக்கு வங்கி வாயிலாக செலுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேவைப்படும் நிதியை தினமும் ரொக்கமாக பெற்று ரே‌ஷன் கடைகளுக்கு சரியாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் ஆணையாளர் பொறுப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையில் நிவாரண உதவி வழங்கும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நிவாரண உதவியை பெறுவதற்காக வரும் பொது மக்கள் முககவசம் அணிந்து வருவதை அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். ரே‌ஷன் கடை களில் கிருமிநாசினிகளை வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

நிவாரண உதவித் தொகை வழங்கும் பணியை கண்காணிக்க நடமாடும் கண்காணிப்புக் குழுக்களையும் தமிழக அரசு நியமித்துள்ளது.

Tags:    

Similar News