செய்திகள்
ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மதுரையில் தொடங்கியது

Published On 2021-05-09 00:52 GMT   |   Update On 2021-05-09 00:52 GMT
நேற்று முதல் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது. இதற்காக அங்கு சிறப்பு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மதுரை:

கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று முதல் தொடங்கியது. உரிய சான்றுகளை காண்பித்து வாங்கிக்கொள்ளலாம் என மதுரை கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் கடுமையானதாக இருக்கிறது. நாள்தோறும் ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் என்ற மருந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளதால் நோயாளிகளின் உறவினர்கள் பலர், அந்த மருந்துக்காக சென்னை சென்று நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே மதுரை மற்றும் அக்கம்பக்கத்து மாவட்டத்தினர் ரெம்டெசிவிர் மருந்துக்காக சென்னைக்கு அலைவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



நேற்று முதல் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது. இதற்காக அங்கு சிறப்பு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மருந்து விற்பனையை மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கி இருக்கிறது. இந்த மருந்து வாங்குவதற்கு மருத்துவரின் சான்று, ேநாயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மைக்கான சான்று, நோயாளிகளின் ஆதார் அடையான அட்டை உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும்.

ஒரு நபருக்கு அதிகபட்சமாக 6 குப்பிகள் (வயல்) வழங்கப்படும். ஒன்றின் விலை ரூ.1568. 6 குப்பிகள் வாங்கினால் ரூ.9408 கொடுக்க வேண்டும். இதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை உள்ளிட்ட 5 நகரங்களில் இந்த மருந்து விற்பனை தொடங்கி இருக்கிறது. அரசின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

மதுரையில் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களும் தேவையான மருந்துகளை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து வாங்கிக்கொள்ளலாம். ஆனால், அனைத்து சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களும் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிக் கொள்ளலாம். கள்ளச்சந்தையில் விற்பனை செய்யக்கூடாது என்பதை கண்டிப்புடன் தெரிவித்து கொள்கிறோம். கூடுதல் விலைக்கு இந்த மருந்தை விற்பனை செய்தால் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக மதுரைக்கு 600 குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்துகள் வந்திருக்கின்றன. வரும் நாட்களில் தேவைக்கு ஏற்ப மருந்துகள் வரவழைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். எந்த தட்டுப்பாடும் இருக்காது. மதுரையில் ஆக்சிஜன் போதுமான அளவிற்கு கையிருப்பு இருக்கிறது. அதனை உற்பத்தி செய்வதற்கு 2 தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும், அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் போதிய அளவு ஆக்சிஜன் தடையின்றி கிடைத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல், கோவை அரசு மருத்துவ கல்லூரியிலும், திருச்சியிலும், நெல்லையிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேற்று தொடங்கியது.
Tags:    

Similar News