செய்திகள்
தூத்துக்குடி அனல் மின்நிலையம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 3 யூனிட்களில் பழுது

Published On 2021-05-08 11:21 GMT   |   Update On 2021-05-08 11:21 GMT
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 2, 3 மற்றும் 4-வது யூனிட்களில் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து மின்உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி:

இந்தியாவில் உள்ள பழமையான அனல்மின் நிலையங்களில் தூத்துக்குடி அனல் மின்நிலையமும் ஒன்று.

1979-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இங்கு 5 யூனிட்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் வீதம் தினமும் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

நிலக்கரி மூலம் இயங்கும் இந்த அனல் மின்நிலையத்தில் உள்ள முதல் 3 யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவை தாண்டி இயங்கி வருவதால் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று அனல் மின்நிலையத்தின் 2, 3 மற்றும் 4-வது யூனிட்களில் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து மின்உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் 3 யூனிட்களில் பழுது ஏற்பட்டதால் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பழுதடைந்த யூனிட்களில் பழுதை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அனல் மின்நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது பழுதை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே இன்று மாலை அல்லது நாளைக்குள் முடிவடைந்து அங்கிருந்து மின் உற்பத்தி தொடங்கும் என கூறினர்.

தற்போது 1 மற்றும் 5-வது யூனிட்கள் மட்டுமே இயங்குவதால் அங்கிருந்து 220 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

Tags:    

Similar News