செய்திகள்
கோப்புபடம்

உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் பகுதியில் ஊரடங்கு புதிய கட்டுப்பாடு மீறல் - 13 கடைகளுக்கு ‘சீல்’

Published On 2021-05-07 15:34 GMT   |   Update On 2021-05-07 15:34 GMT
உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் மற்றும் சின்னசேலம் பகுதியில் ஊரடங்கு புதிய கட்டுப்பாட்டை மீறி திறந்திருந்த 13 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நேற்று உளுந்தூர்பேட்டையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊரடங்கு புதிய கட்டுப்பாட்டை மீறி சிலர் வியாபாரத்துக்காக பகல் 12 மணிக்கு பிறகும் கடையின் ஷட்டரை பாதி அளவுக்கு திறந்து வைத்திருந்தனர். இதைபார்த்த கலெக்டர் கிரண்குராலா அந்த கடைகளை மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி டீ.க்கடைகள் உள்பட 10 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதையடுத்து கலெக்டர் கிரண்குராலா தியாகதுருகம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரது உத்தரவின்பேரில் பிரிதிவிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் கட்டுப்பாட்டை மீறி திறந்திருந்த துணிக்கடை பூட்டி சீல் வைக்கப்பட்டதோடு, அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து தியாகதுருகம் பகுதியில் திறந்திருந்த இனிப்பு, ஜெராக்ஸ் மற்றும் பூக்கடைக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டுப்பாட்டை மீறி திறந்திருந்த மளிகைக்கடைகள், நகைக்கடை மற்றும் டீக்கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

இதேபோல் சின்னசேலத்தில் ஊரடங்கு புதிய கட்டுப்பாட்டை மீறி திறந்திருந்த 2 கடைகளுக்கு தாசில்தார் விஜயபிரபாகரன் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Tags:    

Similar News