செய்திகள்
கொரோனா தடுப்பூசி

சென்னையில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு

Published On 2021-05-07 10:45 GMT   |   Update On 2021-05-07 10:45 GMT
கோவேக்சின் தடுப்பூசியை முதல் முறை போட்டுக்கொண்டவர்கள் 2-வது டோஸ் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கடந்த 1-ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பணி இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது.

இதற்காக மக்கள் ஆர்வமுடன் பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் முதல் தடுப்பூசி போட்டு விட்டு 2-வது தடுப்பூசிக்காக தடுப்பூசி மருந்து கிடைக்காமல் பலர் காத்திருக்கிறார்கள். குறிப்பாக கோவேக்சின் தடுப்பூசியை முதல் முறை போட்டுக்கொண்டவர்கள் 2-வது டோஸ் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

சென்னையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகரப்புற சுகாதார மையங்கள் ஆகியவற்றில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் தடுப்பூசி போடப்படப்படுகிறது.

தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் அனைவருமே ஆர்வத்துடன் ஊசி போடுவதற்கு கூடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேவையான தடுப்பூசி கிடைக்கப்பதில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “சென்னையில் தினமும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையில் தடுப்பூசிகள் போடப்பட்டன. மாநகராட்சிக்கு குறைந்த அளவிலேயே தடுப்பூசி கிடைப்பதால் தற்போது தினமும் 10 ஆயிரம் பேருக்கே தடுப்பூசி போடப்படுகிறது. விரைவில் கூடுதல் தடுப்பூசி கிடைக்கும் என்று காத்து இருக்கிறோம். அப்படி ஒருநிலை ஏற்படும்போது தடுப்பூசி அனைவருக்கும் போடப்படும்.

எனவே பொதுமக்கள் தடுப்பூசி கிடைக்காதோ என்று அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News