செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

குமரியில் இருந்து கேரளாவுக்கு மதுபாட்டில்கள் கடத்தல்- 7 பேர் கைது

Published On 2021-05-07 10:15 GMT   |   Update On 2021-05-07 10:15 GMT
தமிழகத்தைச் சேர்ந்த பலரும் குமரி மாவட்டத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்று கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

குழித்துறை:

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் குமரி கேரளா எல்லையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் மற்றும் கொரோனா தீவிர பரிசோதனைக்கு பின்னரே பொதுமக்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கேரளாவில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், மதுப்பிரியர்கள் பல்வேறு நூதன வழிகளை மேற்கொண்டு தமிழகத்திலிருந்து மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் குமரி மாவட்டத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்று கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவனந்தபுரம் சாக்கோட்டுகோணத்தை சேர்ந்த ஷாபு (வயது 42) என்பவரிடமிருந்து 72 மதுபாட்டில்களும், இடைகோட்டை சேர்ந்த அனிஷ் (23) என்பவரிடமிருந்து 4 மதுபாட்டில்களும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷாஜி (34) என்பவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களும், திருவனந்தபுரம் கரமனையை சேர்ந்த சரவணன் (31) என்பவரிடமிருந்து 48 மதுபாட்டில்களும், விஜிவர்ணன் (39) என்பவரிடமிருந்து 10 பாட்டில்களும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உண்ணி (25) என்பவரிடமிருந்து 10 மதுபாட்டில்களும், திருவனந்தபுரம் கரமனையை சேர்ந்த மகேஷ்ராஜ் (34) என்பவரிடம் இருந்து 54 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் 353 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு இவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுபோல காரக்கோணம் பகுதியில் நடந்த சோதனையில் மாகின் அபுபக்கர், முகமது நதீன், அன்சாத் ஆகியோர் மது கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 119 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News