செய்திகள்
கோப்புபடம்

அதிகரிக்கும் கொரோனா தொற்று: கோவை ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் பற்றாக்குறை - நோயாளிகள் அவதி

Published On 2021-05-07 10:06 GMT   |   Update On 2021-05-07 10:06 GMT
கோவை மாவட்டத்தில் மொத்தம் 51 தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள 4, 224 படுக்கைகளில் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சைகளுக்கு என 2,286 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை:

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் இ.எஸ்.ஐ., அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்காக அங்கு மொத்தம் 1735 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 790 ஆச்சிஜன் படுக்கைகளும், 227 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 51 தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள 4, 224 படுக்கைகளில் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சைகளுக்கு என 2,286 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஒன்று முதல் 3 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கொரேனாவால் பாதிக்கப்படுபவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ஆக்சிஜன் மற்றும் வெண்டி லேட்டர் சிகிச்சை அதிகம் தேவைப்படுகிறது. புதிதாக சிகிச்சைக்கு வரும் நோயாளிககளை தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை வேண்டி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அங்கும் அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது.

மாவட்ட அளவில் சிறிய அளவில் இயங்கி வரும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கோவிட் வார்டு தொடங்கப்பட்டுள்ளது அங்கும் போதுமான இடவசதி மற்றும் படுக்கை இல்லாததால் நோயாளிகளை சேர்க்க மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பெருந்துறையில் இருந்து தினமும் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படுகிறது இதனால் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது வரை எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை. தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு வருபவர்களுக்கு நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம்.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைக்கு தினமும் 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதுவரை மருத்துவமனையில் பற்றாக்குறை இல்லை. இருப்பினும் அரசு ஆஸ்பத்திரியில் தனியார் பங்களிப்புடன் ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இதன்படி இரு எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளது. ஒரு எந்திரம் ரூ.67 லட்சம் மதிப்புடையது. இதில் 2 தயாரிப்பு யூனிட்கள் இருக்கும்.

ஒரு மணி நேரத்துக்கு 27 கனமீட்டர் ஆக்சிஜனை தயாரிக்கும். ஒரு நிமிடத்துக்கு 200 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கப்படும். நாள் ஒன்றுக்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜன், 150 படுக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரம் 3 வாரத்தில் பயன்படுக்கு வர உள்ளது.

மற்றொரு எந்திரம் 55 லட்சம் ரூபாய் மதிப்பிலானது. இன்னும் இரு நாட்களில் இந்த எந்தரம் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது. மருத்துவமனையில் முதியோர் வார்டுக்கு அருகிலும், பயிற்சி மாணவர்கள் விடுதிக்கு அருகிலும் இந்த எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளது. இவை பயன்பாட்டுக்கு வந்தால் வெளியில் இருந்து வரும் திரவ ஆக்சிஜன் நிறுத்தப்பட்டாலும் தடையின்றி நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News