செய்திகள்
போராட்டம்

ஆண்டிபட்டியில் பூக்களை நடுரோட்டில் கொட்டி வியாபாரிகள் போராட்டம்

Published On 2021-05-07 10:04 GMT   |   Update On 2021-05-07 10:04 GMT
ஆண்டிபட்டியில் வியாபாரத்திற்கு அனுமதி மறுத்த பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பூக்களை நடுரோட்டில் கொட்டி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பூ மார்க்கெட் செயல்படுகிறது. தினசரி பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செவ்வந்தி, ரோஜா, மல்லிகை போன்ற மலர்களை இங்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.

பின்னர் இவை சில்லரை வியாபாரிகளுக்கும் வெளியூர்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. தினசரி 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் கிலோ வரை பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

பண்டிகை நாட்கள் மற்றும் திருமண சீசன் காலங்களில் அதிக அளவு கொண்டு வரப்படும். இந்நிலையில் இங்கு பூ மார்க்கெட் செயல்படக்கூடாது என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனையும் மீறி விற்பனைக்காக கொண்டு வந்த பூக்களை வியாபாரிகள் வாங்க வந்தனர்.

தற்போது மக்கள் அதிகம் கூடுவதால் இங்கு மார்க்கெட் செயல்பட அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வியாபாரிகள் தாங்கள் கொண்டு வந்த பூக்களை தேனி, மதுரை சாலையில் வைகை அணை சந்திப்பு பகுதியில் தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை கடைகளுக்கு அனுமதி அளிப்பதைபோல தங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. தங்க கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கொரோனா விதிகளை பின்பற்றி சமூக இடைவெளியில் மதியம் 12 மணி வரை வியாபாரம் செய்து கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட அவர்கள் வியாபாரத்தை தொடர்ந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News