செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூரில் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது : சித்தா மையத்தில் 66 பேருக்கு சிகிச்சை

Published On 2021-05-06 22:51 GMT   |   Update On 2021-05-07 18:22 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பப்டுள்ள கொரோனா மையங்களுக்கு சிகிச்சைக்காக செல்கிறார்கள்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பப்டுள்ள கொரோனா மையங்களுக்கு சிகிச்சைக்காக செல்கிறார்கள். இவர்களுக்கு அலோபதி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் சித்த மருத்துவ சிகிச்சை பெற விரும்புகிறவர்களுக்காக கடந்த கொரோனா பாதிப்பின் போது திருப்பூர் காங்கேயம் ரோட்டில் சித்தா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.

இதன் மூலம் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். இதுபோல் சித்தா சிகிச்சை பெற்றவர்கள் யாரும் பலியாகவில்லை. இதனால் பலரும் சித்தா சிகிச்சை பெற விரும்பினர். இதன் பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்ததால் சித்தா சிகிச்சை மையம் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் சித்தா சிகிச்சை மையத்தை திறக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் சித்தா சிகிச்சை மையம் 140 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டு, மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதன்படி தற்போது வரை 66 பேருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சித்தா சிகிச்சை பெற விரும்புவதாக கடிதம் கொடுத்தால், அவர்கள் சித்தா சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள்.

சித்தா சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தினமும் காலை 6.30 மணிக்கு உப்பு மஞ்சள் வாய் கொப்பளித்தல், 7 மணிக்கு மூலிகை தேநீர், 7.30 மணிக்கு நீராவி பிடித்தல் மற்றும் 8 வடிவ நடைபயிற்சி, 8 மணிக்கு ரத்த அழுத்த பரிசோதனை, 8.30 மணிக்கு உணவு மற்றும் உள்மருந்துகள், கபசுர குடிநீர், பகல் 11 மணிக்கு டீ மற்றும் சிறுதானிய ரொட்டிகள், 11.30 மணிக்கு யோகாசன பயிற்சிகள், மதியம் 1 மணிக்கு உணவு மற்றும் உள்மருந்துகள், கபசுர குடிநீர், மாலை 4 மணிக்கு டீ மற்றும் சுண்டல் சிற்றுண்டி, மாலை 6 மணிக்கு ரத்த அழுத்த பரிசோதனை, இரவு 8.30 மணிக்கு உணவு மற்றும் உள்மருந்துகள், கபசுர குடிநீர், 10 மணிக்கு அதிமதுர பால் ஆகியவை வழங்கப்படுகிறது.


Tags:    

Similar News