செய்திகள்
சின்னசேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதியை சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் சேகர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

கொரோனா தொற்று பரவல் : சின்னசேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதியை அதிகாரி ஆய்வு

Published On 2021-05-06 17:56 GMT   |   Update On 2021-05-06 17:56 GMT
கொரோனா தொற்று பரவல் காரணமாக சின்னசேலத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியை அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சின்னசேலம்:

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதன்படி சின்னசேலம் பகுதிக்கு உட்பட்ட தென்சிறுவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 65 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சின்னசேலம் விஜயபுரம் 12-வது தெருவை சேர்ந்த 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கு மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் இருக்க விஜயபுரம் 12-வது தெரு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கூடுதல் இயக்குனர் சேகர் நேற்று சின்னசேலத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா பரவல் அதிக வீரியம் கொண்டு இருப்பதால் மிகுந்த கவனத்துடன் அரசின் விதிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். களப்பணியாளர்கள் முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என்றார். அப்போது கள்ளக்குறிச்சி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சதீஷ், வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன், சுகாதார ஆய்வாளர்கள் மாயக்கண்ணன், சார்லஸ் மற்றும் களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News