செய்திகள்
தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையம் வெறிச்சோடி இருப்பதை படத்தில் காணலாம்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு - சென்னையில் இருந்து வரவழைக்க ஏற்பாடு

Published On 2021-05-06 14:55 GMT   |   Update On 2021-05-06 14:55 GMT
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் இருந்து தடுப்பூசி வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி முகாம், கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது.

தடுப்பு மருந்து போதிய அளவு இல்லாததால், இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வந்தது.

இதற்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, ஊட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிற அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என 43 மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

சென்னையில் இருந்து கடந்த வாரம் நீலகிரிக்கு 7,200 கொரோனா தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஒரே நாளில் 4,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் ஓரிரு நாட்களில் தடுப்பூசி தீர்ந்தது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை.

ஊட்டியில் உள்ள மையங்களுக்கு முதல் டோஸ் மற்றும் குறிப்பிட்ட இடைவெளியில் 2-வது டோஸ் செலுத்திக்கொள்ள பொதுமக்கள் வருகின்றனர். தடுப்பூசி தட்டுப்பாட்டால் செவிலியர்கள் அவர்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர். இதனால் தடுப்பூசி போடும் இடங்கள் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் நீலகிரியில் 2 நாட்கள் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து விரைவில் கோவிஷில்டு தடுப்பூசி வரவழைக்கப்பட இருக்கிறது. அதன் பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என்றனர்.

Tags:    

Similar News