செய்திகள்
ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய இலவச சேவை பஸ்சை காணலாம்

மருத்துவமனை வாசல்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பஸ்கள்- ஜெயின் அமைப்பினர் ஏற்பாடு

Published On 2021-05-06 03:19 GMT   |   Update On 2021-05-06 03:19 GMT
சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வாசல்களில் ஆக்சிஜனுடன் கூடிய பஸ்கள் நிறுத்தும் வசதி நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு சார்பில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வாசல்களில் ஆக்சிஜனுடன் கூடிய பஸ்கள் நிறுத்துவதற்கான விழா வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று நடந்தது.

விழாவிற்கு ஜெயின் அமைப்பின் தலைவர் அனில் ஜெயின் தலைமை தாங்கி, பஸ்களில் ஆக்சிஜன் செயல்படும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

பின்னர் அனில் ஜெயின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூச்சுத்திணறலோடு அவசர சிகிச்சைக்காக வீடுகளில் இருந்து அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி அளிக்கும் விதமாக சென்னையில் இலவச பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த பஸ்கள் சென்னையில் உள்ள 4 மருத்துவ கல்லூரி மருத்துவமனை வாசல்களில் நிறுத்தப்பட்டு இருக்கும். இந்த வசதி தேவைப்படுபவர்கள் 94343 43430 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவோ, வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

ஒரு பஸ்சில் ஒரே நேரத்தில் 6 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி அளிக்க முடியும். இதற்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு பஸ் மூலம் 6 ஆம்புலன்ஸ்களின் சேவையை அளிக்க முடிகிறது.

பஸ்களை கீதா வித்யா மந்திர் பள்ளி வழங்கி உள்ளது. இதனுடைய வரவேற்பை பொறுத்து சென்னை உட்பட மாநிலம் முழுவதும் முக்கியமான நகரங்களில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நிறுத்தி பொதுமக்களுக்கு சேவை அளிக்க திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கன்வீனர் பிரமோத் சவுடியா, முதன்மைச் செயலாளர் பரத் காண்டி தோஷி, தேசிய தலைவர் சுரேஷ் முக்தா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News