செய்திகள்
முக ஸ்டாலின்

சட்டசபை திமுக தலைவராக இன்று மாலை தேர்வு- மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்திக்கிறார்

Published On 2021-05-04 08:51 GMT   |   Update On 2021-05-04 08:51 GMT
மு.க.ஸ்டாலின் இன்று இரவு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக கவர்னரிடம் திமுக சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 158 இடங்களை தி.மு.க. கூட் டணி கைப்பற்றியது. தி.மு.க. மட்டுமே தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்றது. இதையடுத்து தி.மு.க. ஆட்சி அமைக்கிறது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

மு.க.ஸ்டாலினை சட்டமன்ற தலைவராக (முதல்-அமைச்சராக) முறைப்படி தேர்வு செய்வதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

அதில் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கிறார்கள். அப்போது மு.க.ஸ்டாலின் தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்.

இதற்கான கடிதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திடுவார்கள்.

அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் இன்று இரவு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக கவர்னரிடம் தி.மு.க. சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.



கவர்னர் அனுமதித்தால் இன்று இரவே மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்திப்பார் என்று தெரிகிறது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்து முடிவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் நாளை காலை இந்த சந்திப்பு நடைபெறும்.

அப்போது தி.மு.க. சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட விவரங்களை கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.

கவர்னர் பன்வாரிலால் அந்த கடிதத்தை ஆய்வு செய்வார். பிறகு மு.க.ஸ்டாலினை ஆட்சி அமைக்க வருமாறு முறைப்படி அழைப்பு விடுப்பார். இதையடுத்து புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடையும்.

மு.க.ஸ்டாலின் வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சராக பதவி ஏற்க முடிவு செய்துள்ளார். கொரோனா காலமாக இருப்பதால் எளிமையான முறையிலேயே பதவி ஏற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்.

எனவே கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. விழாவுக்கு நிறைய பேர் அழைக்கப்பட மாட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது.

குறிப்பிட்ட அளவு சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக் கொள்வார். அவருக்கு பன்வாரிலால் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார்.

மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொள்வார்கள். யார்-யார்? அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்கள் என்ற பட்டியல் தயாராக இருப்பதாக தெரிகிறது. அந்த பட்டியல் முன்னதாக கவர்னரிடம் கொடுக்கப்படும்.

மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் கோட்டைக்கு சென்று முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார். அப்போது மிக முக்கிய திட்டத்துக்கான கோப்புகளில் கையெழுத்திடுவார்.

அதேபோல மற்ற அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.

அதன்பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்பட முக்கிய திட்டங்கள் குறித்தும் அரசு அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

மு.க.ஸ்டாலினுடன் எத்தனை அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

அமைச்சர்கள் பட்டியலுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே அமைச்சராக இருந்த மூத்த தலைவர்கள் மற்றும் பல்வேறு புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்பதற்காக சட்டசபை கூட்டம் ஓரிரு நாட்களில் சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட இருக்கிறது.

தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்றுக்கொள்வார்கள்.
Tags:    

Similar News