செய்திகள்
கேஎஸ் அழகிரி

மத்திய சுகாதாரத்துறை மந்திரி பதவி விலக வேண்டும்- கேஎஸ் அழகிரி வலியுறுத்தல்

Published On 2021-05-01 01:07 GMT   |   Update On 2021-05-01 01:07 GMT
136 கோடி மக்களை மரண பயத்தில் ஆழ்த்தியதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரி பதவி விலக வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவிலிருந்து மக்கள் உயிரை காக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசி மட்டுமே. இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 93 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட 186 கோடி டோஸ்கள் தேவை. 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 35 கோடி மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போட வேண்டும். இதற்கு இரண்டு டோஸ்கள் வீதம் 70 கோடி தடுப்பூசிகள் தேவை. இதில் 15 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 1 டோஸ் போட்டவர்கள் 12.12 கோடி. இரண்டு டோஸ் போட்டவர்கள் 2.36 கோடி மட்டுமே.

ஆனால், இரண்டு தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்வதோ மாதம் 1 கோடியே 20 லட்சம் டோஸ்கள் தான். 18 வயதிற்கு மேற்பட்ட 93 கோடி மக்களுக்கு தேவையான 186 கோடி தடுப்பூசி டோஸ்களை எப்போது தயாரிக்கப்போகிறது? எப்போது போடப்போகிறது? தற்போதுள்ள உற்பத்தியை ஒப்பிட்டுப் பார்த்து எத்தனை மாதங்கள் ஆகும் என கணக்கிட்டால் திகில் தான் ஏற்படுகிறது. மக்களின் உயிரை காக்க ஒரே பாதுகாப்பு கவசமாக இருக்கிற தடுப்பூசி போடுவதற்கு இரண்டு தனியார் நிறுவனங்கள் அல்லாமல் வேறு திறமைமிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி அளிக்கவில்லை?



மக்கள் உயிருக்காகப் போராடுகிற நேரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் தடுப்பூசி தயாரிக்கிற ஏகபோக உரிமையை அனுமதித்தது ஏன்? இந்திய மக்களின் மீது பிரதமர் மோடிக்கு அக்கறை இருந்தால், 1960-களில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தடுப்பூசி உற்பத்தி செய்கிற உரிமையை வழங்கி அம்மை, போலியோ, காலரா போன்ற கொள்ளை நோய்களை கடந்த கால அரசுகள் ஒழித்தது போன்ற அணுகுமுறையை மோடி அரசு கையாண்டிருக்க வேண்டும்.

இந்திய மக்கள் அனைத்து சுகங்களையும் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து, எதிர்காலத்தைப் பற்றி கற்பனை கூடச் செய்ய முடியாமல், என்றைக்கு நமக்கு கொரோனா தொற்று வருமோ, எப்போது நமது உயிர் பறிக்கப்படுமோ? என்ற அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்து வருகின்றனர்.

136 கோடி மக்களையும் ஒருசேர மரண பயத்தில் ஆழ்த்தியதற்குப் பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொண்டு குறைந்தபட்சம் மத்திய பா.ஜ.க. அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக இதைவிட வேறு என்ன காரணங்கள் வேண்டும்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News