செய்திகள்
கோவிஷீல்டு தடுப்பூசி

சென்னைக்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தன

Published On 2021-04-29 06:24 GMT   |   Update On 2021-04-29 06:24 GMT
கொரோனா தடுப்பூசிகள் இதுவரை 69.85 லட்சம் டோஸ் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.
சென்னை:

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து தற்போது படிப்படியாக தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.

முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட பின் முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் வரும் 1-ந் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது, இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

இதுவரை 69.85 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.



பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி தடுப்பூசி கிடைத்திட 1.5 கோடி தடுப்பூசிகள் பெற ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்த 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழகத்திற்கு இதுவரை 67 லட்சத்து 85 ஆயிரத்து 720 டோஸ் தடுப்பூசி பெறப்பட்டு இருந்த நிலையில் இன்று வந்துள்ள 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியையும் சேர்த்தால் மொத்தம் 70 லட்சத்து 85 ஆயிரத்து 720 டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News