செய்திகள்
கொரோனா தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி- இன்று மாலை முன்பதிவு தொடக்கம்

Published On 2021-04-28 06:20 GMT   |   Update On 2021-04-28 06:20 GMT
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது சமூக நோய் எதிர்பாற்றலை உருவாக்கி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. சென்னையில் பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துவிட்டது.

இதேபோல் இந்தியா முழுவதுமே கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா பரவல் சதவீதத்துக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.



தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கோவில்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சலூன் கடைகள், பெரிய கடைகள் மூடப்பட்டுள்ளன. ஓட்டல்கள், டீக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. முதலில் டாக்டர்கள், நர்சுகள், போலீசார் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நாள்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 45 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்து வருவதால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை ஏற்று வருகிற 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது சமூக நோய் எதிர்பாற்றலை உருவாக்கி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கு
http://www.cowin.gov.in
என்ற இணையதளத்துக்குள் சென்று ‘ரிஜிஸ்டர் மை செல்ப்’ என்பதை அழுத்த வேண்டும் பின்னர் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து பெயர், வயது, உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

ஆதார் எண் உள்ளிட்ட அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து தடுப்பூசி போட முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் கோவின் செயலி மற்றும் ‘ஆரோக்யா சேது’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். தடுப்பூசி போட பதிவு செய்பவர்கள் உள்பட 4 குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரே நேரத்தில் பதிவு செய்யும்போது அருகில் உள்ள தடுப்பூசி மையத்தை கண்டுபிடித்து அதற்கு ஏற்ப முன்பதிவு செய்யலாம்.

இதுதொடர்பாக கோவின் பயன்பாட்டு தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது:-

இந்தியாவில் மே 1-ந்தேதி முதல் 18 வயது நிறைந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்பதால் நேரடியாக மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட முடியாது. அதற்கு பதிலாக கோவின் இணையதளத்தில் முன்பே பதிவு செய்ய வேண்டும்.

தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்கு இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு அதிக கூட்டம் இல்லாத மையங்களில் பொதுமக்கள் நேரடியாக சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தற்போது தினமும் 60 லட்சம் முதல் 70 லட்சம் பேர் தினமும் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே தினமும் 50 லட்சம் பேர் வரை முன்பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே இன்று காலை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கோவின் இணைய தளம் மற்றும் ஆரோக்கிய சேது செயலியில் முன்பதிவு செய்ய முயன்றனர். ஆனால் அவை ‘ஓப்பன்’ ஆகவில்லை. இதனால் இணையதளத்தில் முன்பதிவு செய்வதில் சிக்கல் எழுந்தது.

முன்பதிவு செய்ய முயன்றவர்கள் மிகவும் திணறினார்கள். இதுபற்றி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்தியா முழுவதும் இதே நிலையே காணப்பட்டது. இது மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்று மாலை 4 மணிக்கு பிறகு கோவின் இணையதளம் மற்றும் செயலி, ஆரோக்கிய சேது செயலியில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி போடக்கூடிய மையங்களுக்கு சென்று தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட உள்ளது.
Tags:    

Similar News