செய்திகள்
அய்யப்பன்

விக்கிரவாண்டி அருகே கூலித்தொழிலாளி கொலை

Published On 2021-04-27 04:22 GMT   |   Update On 2021-04-27 04:22 GMT
விக்கிரவாண்டி அருகே கூலித்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அடுத்த வா.பகண்டை அருகே உள்ள சிவபெருமான்பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 44). கூலித் தொழிலாளி. இவரது மனைவி நதியா(38). சம்பவத்தன்று அய்யப்பனின் உறவினரான சரவணன் மனைவி விஜயகுமாரி என்பவர் நதியாவை பற்றி தவறாக அய்யப்பனிடம் கூறியுள்ளார்.

இது குறித்து அய்யப்பன் கேட்டதால் நதியா கோபித்து கொண்டு கண்டசோழ நல்லூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த அய்யப்பன், தனது மனைவி குறித்து தவறாக கூறிய விஜயகுமாரியை கேட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், விஜயகுமாரியை தாக்கினார். இதில் காயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணன்(47), அவரது தம்பி சரத்குமார்(23), அக்காள் ஜானகி(45), ஜானகியின் கணவர் குமரவேல்(48) ஆகியோர் கூட்டாக சேர்ந்து அய்யப்பனை அவரது வீட்டில் வைத்து உருட்டு கட்டையால் அடித்தனர். இதில் படுகாயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யப்பன் நேற்று அதிகாலை இறந்தார்.

இது குறித்து நதியா கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சரவணன், சரத்குமார், ஜானகி, குமரவேல் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News