செய்திகள்
கொரோனா தடுப்பூசி

சென்னைக்கு இன்று மேலும் 4 லட்சம் தடுப்பூசி வந்தன

Published On 2021-04-24 07:05 GMT   |   Update On 2021-04-24 07:05 GMT
தமிழகத்துக்கு இதுவரை 57 லட்சத்து 3 ஆயிரத்து 590 டோஸ் கோவிஷீல்டு மருந்து, 10 லட்சத்து 82 ஆயிரத்து 130 டோஸ் கோவேக்சின் மருந்து என ஆக மொத்தம் 67 லட்சத்து 85 ஆயிரத்து 720 டோஸ் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன.
சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தமிழகத்தில் இதுவரை 51 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதில் கோவேக்சின் தடுப்பூசி முதல் டோஸ் போட்டவர்கள் 2-வது டோஸ் போடுவதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றால் கோவேக்சின் மருந்து தற்போது கைவசம் இல்லை. கோவிஷீல்டு தடுப்பூசி தான் கைவசம் உள்ளது என்று தெரிவித்தனர்.

முதல் டோஸ் கோவேக்சின் போட்டப்பிறகு 2-வது கட்டமாக மற்றொரு தடுப்பூசியான கோவிஷீல்டை போட்டுக்கொண்டால் ஏதாவது சிக்கல் வந்து விடுமோ என்று பயந்து நிறையபேர் மறுத்து விடுகிறார்கள்.



தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி தான் அதிக அளவில் கைவசம் உள்ளது. கோவேக்சின் அந்த அளவுக்கு இல்லை. 50 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் தான் இருந்தது.

சென்னையில் 10,500 கோவேக்சின் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பு உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி 1 லட்சம் கைவசம் உள்ளது. இதனால் புதிதாக கோவேக்சின் தடுப்பூசி போட விரும்புபவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடப்படாமல் இருந்தது. நிறைய இடங்களில் தட்டுபாடு நிலவியது.

ஆஸ்பத்திரிகளிலும் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறி வந்தனர். கோவேக்சின் முதல் டோஸ் போட்டவர்கள் 2-வது டோஸ் போட வந்தால் நிறைய ஆஸ்பத்திரிகளில் கோவேக்சின் இருப்பு இல்லை. ஒருவாரம் கழித்து வாருங்கள் என்று திருப்பி அனுப்பினார்கள்.

இதனால் கோவேக்சின் 2-வது டோஸ் போடாமல் நிறையபேர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சென்னைக்கு இன்று மேலும் 4 லட்சம் தடுப்பூசி மருந்து விமானம் மூலம் வந்தது. இதில் 2 லட்சம் கோவேக்சின் தடுப்பூசி, 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்திருந்தன.

4 லட்சம் தடுப்பூசி மருந்துகளும் தேனாம்பேட்டையில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்குக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. அதை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தமிழகத்துக்கு இதுவரை 57 லட்சத்து 3 ஆயிரத்து 590 டோஸ் கோவிஷீல்டு மருந்து, 10 லட்சத்து 82 ஆயிரத்து 130 டோஸ் கோவேக்சின் மருந்து என ஆக மொத்தம் 67 லட்சத்து 85 ஆயிரத்து 720 டோஸ் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன.

Tags:    

Similar News