செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணை தீவிரம்

Published On 2021-04-24 04:13 GMT   |   Update On 2021-04-24 04:13 GMT
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன் வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை சம்பவம் தொடர்பாக கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு முக்கிய சாட்சியான கோவில்பட்டி சிறை சூப்பிரண்டு சங்கர் ஆஜராகி சாட்சியம் அளித்தார். நேற்று முன்தினமும் இந்த வழக்கில் பல மணி நேரம் விசாரணை நடந்தது.

இந்தநிலையில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருக்கும் 9 போலீசாரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பின்னர் இந்த வழக்கை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி தாண்டவன் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து 9 பேரும் மீண்டும் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News